சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதால், பல பகுதிகளில் லேசான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையால் அரபிக்கடலை ஒட்டிய தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலோர மாநிலங்களில் சில பகுதிகளில் மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. மேலும் சமீப நாட்களாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காலை 9 மணியளவில் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்குவங்கம் கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் ஒடிசா, வங்கதேசம் பகுதிகளில் கனமழை பெய்யும் அதேசமயம் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் பகுதிகளில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹ
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.