சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எதிஹாட், கத்தார் ஏர்வேஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக், கேத்தே பசிபிக் உள்ளிட்ட உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளின் வசதிக்காக விமானத்தில் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

இதில் சில நிறுவனங்களின் முதல் வகுப்பு பயணிகளுக்கான இருக்கைகள் கூடுதல் இடவசதியுடன் இருப்பதுடன் உணவருந்த தேவையான மடக்கு டேபிளை உணவகத்தில் உள்ளது போல் ஒரு முழு அளவிலான மேசையாக வழங்குகின்றன.

சில பிரீமியம் கேபின்களில் “நண்பர் இருக்கை” எனப்படும் சிறிய பக்கவாட்டு இருக்கை வைத்துள்ளதுடன் பயணியுடன் மற்றொரு நபரும் சிறிது நேரம் அமர்ந்து உணவருந்த வசதிகள் உள்ளது.

எதிஹாட்டின் A380 ரக விமானத்தில் இரண்டு பயணிகள் அருகருகே படுத்துக்கொண்டு பயணம் செய்தாலும் மற்றவருக்கு எந்த இடைஞ்சலும் இல்லாத வகையில் மதிக்கக்கூடிய வகையில் படுக்கைகள் உள்ளன.

சில விமானங்கள் இரண்டு படுக்கைகளை ஒன்றாக இணைக்கும் வசதிகளும் கொண்டுள்ளது இது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது கணவன் மனைவி ஆகியோருக்கு உகந்ததாக உள்ளது.

இருந்த போதும் சிலர் இந்த வசதிகளை தவறாக பயன்படுத்துவதாக சமீப நாட்களில் புகார்கள் அதிகரித்துள்ளது.

ஒன்றாக பயணம் செய்யும் இரண்டு பேரில் ஒருவர் இந்த சிறப்பு வசதிகள் கொண்ட வகுப்பில் டிக்கெட் எடுப்பதும் மற்றொருவர் வேறு சாதாரண வகுப்பில் குறைவான மதிப்பில் உள்ள டிக்கெட்டுகளை எடுப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில நேரத்தில் உயர்வகுப்பில் உள்ள தங்களது நண்பர் அல்லது உறவினருடன் சென்று அமர்ந்து கொண்டு அரட்டையில் ஈடுபடுவதோடு பல நேரங்களில் ஒரே படுக்கையில் இரண்டு பேர் படுத்துக்கொண்டு செல்வதும் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

விமானப் பணியாளர்கள் இதை கண்ணியமாக கண்டித்து அவரவர் இருக்கையில் சென்று அமர சொல்லும் போதும் சிறிது நேரம் அவரவர் இருக்கைக்கு செல்வது போல் பாசாங்கு செய்து பின்னர் மீண்டும் உயர்வகுப்புச் சென்று விடுகின்றனர்.

இதனால் விமானப் பணியாளர்கள் அந்தப் பயணிகளுக்கு சலுகை வழங்குவதாக அதே வகுப்பில் பயணிக்கும் மற்ற பயணிகள் புகார் எழுப்பும் நிலையில் இது சக பயணிகளையும் சங்கடத்தில் ஆழ்த்துகிறது.

இதையடுத்து பல விமான நிறுவனங்கள் இதுபோன்ற பயணிகளிடம் கண்டிப்புடன் நடக்க தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளதுடன் இதுபோன்ற வசதி தேவைப்படும் பயணிகளை அதே வகுப்பில் இரண்டு டிக்கெட் எடுக்கவும் வலியுறுத்திவருகின்றன.

மேலும், படுக்கைகள் வசதி கொண்ட இருக்கைகளில் ஒரே சீட் பெல்ட் இருப்பதால் விமானம் வானில் சீரற்ற முறையில் பறக்கும் போது அது இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.