ரியாத்: 20 வருடம் கோமாவில் இருந்த சவுதி அரேபியாவின்  இளவரசர் அல் வாலீத்  (வயது 36)  காலமானார்.  கோமாவில் இருந்த நிலையில்  அவரது உயிர் பிரிந்தது

தூங்கும் இளவரசர் என அறியப்பட்ட சவுதி அரேபியாவை சேர்ந்த இளவரசரான அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் மரணமடைந்தார். அவருக்கு வயது 36.  இவர் ராணுவ கல்லூரியில் படித்து வந்த போது 2005-ம் ஆண்டு லண்டனில் ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றார். அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என எண்ணி அரச குடும்பத்தினர் அவரை பாதுகாத்து வந்தனர். சுமார் 20 வருடம் கோமாவில் இருந்து வந்த  இளவரசர் அல் வாலீத்  இன்று காலமானார்.

அரச குடும்பங்களின் வாரிசுகள் என்றால் சொகுசு வாழ்க்கை என நாம் நினைத்துக்கொண்டிருப்போம் ஆனால், இந்த மன்னர் வீட்டு வாரிசு  சுமார் 20 வருடங்களாக எந்தவித சுக துக்கங்களில் கலந்துகொள்ளாமல்,  வெளி உலகில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் கோமாவில் இருந்து வந்த நிலையில், இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இளவரசர் அல் வாலீத்  கடந்த 2005ம் ஆண்டு ராணுவ கல்லூரியில் படித்து வந்த போதுலண்டனில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கினார். அப்போது அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக கோமா நிலைக்கு சென்றார். அப்போது அமெரிக்கா, கனடாவை சேர்ந்த மருத்துவக்குழுவினர் எவ்வளவோ முயன்றும் அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரமுடியவில்லை. அன்று முதல் வெண்டிலேட்டர் உதவியுடன், உணவுக்குழாய் மூலம் உணவுகளை எடுத்துக்கொண்டு ஒரு தனிமையான உலகத்தில் வாழ்ந்து வந்தார்.

இளவரசர் அல் வாலீத்துக்கு ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் தொடர் மருத்து கண்காணிப்பு வங்கப்பட்டு வந்தது.   கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளவரசர் கைகளை அசைத்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. அவர் நலமுடன் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்துவந்தனர். இளவரசர் அல் வலீத் பின் காலித் பின் தலால் கோமாவில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார் என அவரது குடும்பத்தினர், நண்பர்கள் காத்திருந்த வேலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மறைவு செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இளவரசர் அல் வாலீத் மரணத்தை அவரது தந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அல்லாஹ்வின் ஆணை மற்றும் விதியின் மீது முழு நம்பிக்கையுடனும் ஆழ்ந்த சோகத்துடனும் துக்கத்துடனும் எங்கள் அன்பு மகன் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் அல்லாஹ்வின் கருணையால் இன்று காலமானார். அவருக்கு அல்லாஹ் கருணை காட்டட்டும் என அவரது தந்தை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் அஸர் தொழுகைக்குப் பிறகு, இளவரசர் அல்-வலீத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சவூதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல் அஜீசின் கொள்ளுப்பேரனாவார்.