டெல்லி: இந்தியாவில் 10லட்சம் பேருக்கு இலவச ‘ஏஐ’ பயிற்சி வழங்கப்பட உள்ளதாக  மத்தியஅமைச்சர் அஸ்வினி வை‌ஷ்ணவ்  தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தின் 10 ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவில் 10லட்சம்  பேருக்கு இலவசமாக செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தலைநகர் புதுடெல்லியில் உள்ள யா‌ஷோபூமி மாநாட்டு நிலையத்தில் ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தின் 10 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் நடைபெற்றது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் CSC SPV ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலை எடுத்துக்காட்டுகிறது.   கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெரிய அளவில் மின்னிலக்கமயமாகிவிட்டதாக மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில்,  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், மின்னணு, தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் ஜித்தின் பிரசாதா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்,  “நாம் இப்போது செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இருக்கிறோம், (செயற்கை நுண்ணறிவு) இப்போது வெகு விரைவில் வளர்ந்துவருகிறது. காலப்போக்கில் நாம் புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தவேண்டும்,” என்று தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பத்து லட்சம் குடிமக்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என்றும், கிராம அளவிலான தொழில்முனை வோருக்கு (விஎல்இ) முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தை 2015ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். நாட்டின் எல்லா பகுதிகளையும் தொழில்நுட்ப அம்சங்களைச் சென்றடையச் செய்வது இயக்கத்தின் இலக்காகும். ‘மின்னிலக்க இந்தியா’ கடந்த 10 ஆண்டுகளில் மின்னிலக்க அம்சங்கள் தொடர்பிலான குறைபாடுகளைச் சரிசெய்து ஆளுமை முறையை உருமாற்றியுள்ளது, நிதி சார்ந்த அம்சங்களில் அனைவரையும் உள்ளடக்கியிருக்கிறது, இணையச் சேவைகள் அனைவரையும் சென்றடைய வகைசெய்துள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கம் இந்தியாவை உலகின் மூன்றாவது ஆகப் பெரிய மின்னிலக்கப் பொருளியலாக உருவெடுக்கச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொது சேவை மையங்களின் (CSC) ஊழியர்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்த  . வைஷ்ணவ், நாடு முழுவதும் உள்ள கிராம அளவிலான தொழில்முனைவோர் ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் இந்தியாவின் நன்மைகளை வழங்குவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளனர் என்றார். CSC நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவீத கிராமங்களை அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

விசா பரிவர்த்தனைகளை விட UPI கொடுப்பனவுகள் அதிகமாகிவிட்டதாக அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார், இது இந்தியாவில் ஒரு தேநீர் விற்பனையாளர் அல்லது காய்கறி விற்பனையாளர் டிஜிட்டல் கொடுப்பனவுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை உலகிற்குக் காட்டுகிறது. குடிமக்களுக்கு IRCTC சேவைகளை வழங்கத் தொடங்க அனைத்து VLE-களையும்  வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

உலகளாவிய கல்வி தளத்தை அறிமுகப்படுத்த இந்தியாவில் முதல் அகாடமியை திறந்துள்ளது OpenAI…..