டெல்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கரண் தேவ் என்பவர் ஜூலை 13ம் தேதி அன்று வீட்டில் மின்சாரம் பாய்ந்து மூர்ச்சையானதாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மாதா ரூபராணி மாகோ மருத்துவமனை மருத்துவர்கள் அவர் இறந்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு கரண் தேவ் மனைவி சுஷ்மிதா தேவ் மற்றும் கரண் தேவுக்கு உறவுமுறையில் சகோதரரான ராகுல் தேவ் என்பவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் குறைந்த வயது நபர் என்பதாலும் மரணம் குறித்து மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததாலும் இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனிடையே இறந்துபோன கரண் தேவின் உடன்பிறந்த தம்பியான குணால் தனது சகோதரனின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதோடு, கரணின் மனைவியும் சகோதரனின் உறவினரும் (ராகுல்) இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக சுஷ்மிதாவும் ராகுலும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய தகவல்களும் போலீசாரிடம் சிக்கியது.
அதில் சுஷ்மிதா ராகுலிடம், “மருந்து சாப்பிட்ட பிறகு இறக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று பாருங்கள். அவர் சாப்பிட்டு மூன்று மணி நேரம் ஆகிறது, ஆனால் வாந்தி இல்லை, வேறு எந்த அறிகுறியும் இல்லை, அவர் இன்னும் இறக்கவில்லை.”
“நாம் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் உள்ளதா?” என்று கேட்டுள்ளார்.
ராகுல், “வேறு எதுவும் யோசிக்க முடியாவிட்டால், அவருக்கு மின்சார அதிர்ச்சி கொடு” என்று பதிலளித்தார்.

சுஷ்மிதா: “அவரை அதிர்ச்சிக்குள்ளாக்க நான் எப்படி கட்ட வேண்டும்?”
ராகுல்: “டேப்பைப் பயன்படுத்து”
சுஷ்மிதா: “அவரது சுவாசம் மிகவும் மெதுவாக உள்ளது.”
ராகுல்: “உன்னிடம் உள்ள அனைத்து மாத்திரையையும் அவருக்குக் கொடு”
சுஷ்மிதா: “அவரது வாயைத் திறக்க முடியவில்லை. நான் தண்ணீரை ஊற்ற முடியும், ஆனால் மாத்திரையை என்னால் கொடுக்க முடியாது. நீங்கள் இங்கே வாருங்கள், ஒருவேளை நாம் இரண்டு பெரும் சேர்ந்து முயற்சி செய்தால் அதை அவருக்கு கொடுக்க முடியும்.” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த வாட்ஸப் தகவல்களை வைத்து அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கரண்தேவுக்கு தூக்க மாத்திரை கொடுத்ததையும் பின்னர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து புகார் அளித்த கரணின் உறவினர்கள் தனது கள்ளக்காதலனுடன் வாழவும் அதேநேரத்தில் தனது கணவரின் சொத்தை அனுபவிக்கவும் சுஷ்மிதா தேவ் இந்த கொலையை செய்திருப்பதாக குற்றசாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சுஷ்மிதா மற்றும் ராகுல் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரணின் உடற்கூறாய்வு அறிக்கைகள் கிடைத்ததும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.