நாமக்கல்: அதிமுக பாஜக “கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்” என்று கூறியதுடன், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் சிறுநீரக திருட்டு, மயிலாடுதுறை எஸ்பி சஸ்பெண்டு குறித்து விமர்சித்தவர், திமுகவினர் மாம்பழம் விற்பது போல கூவி, கூவி ஆட்களை சேர்க்கின்றனர் என்றார்.

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் வி. ரமேஷ் 12-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அண்ணாமலை, சேலம் ஆடிட்டர் ரமேஷ், அரவிந்த் போன்றவர்கள் பாஜகவில் வளர்ந்து வந்த தலைவர்களாவர். இவர்கள் எல்லாம் பெரிய அளவில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கிலே அவர்களை படுகொலை செய்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவத்தில், அப்போதைய ஆட்சியாளர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. முதலில் சிலரை குற்றவாளி என்றனர், அதன்பிறகு வேறு சிலரை காண்பித்தனர். பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித்ஷாவிடம் வலியுறுத்தி வழக்குகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
தமிழ்நாட்டில், சித்தாந்த அடிப்படையில் கொலைசெய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் போன்ற தியாகிகளின் மரணத்துக்கு, பாஜக ஆட்சிக்கு வரும் உரிய தீர்வு கிடைக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. திமுகவைச் சேர்ந்த சிலர் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு உரிய விசாரணைக் குழு அமைத்து சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பத்திரிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து தனது குறைகளைத் தெரிவிப்பது விதிகளுக்கு புறம்பானது என்றாலும், அவருடைய மனக்குமுறலை தெரிவிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார். எந்த விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த பிரச்னையில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
யிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் இரண்டு விஷயங்களை கூறினார்கள். எனக்கு தெரியும், சீருடையில் இருக்கும் அரசு அதிகாரிகள் பத்திரிகையில் பேசக் கூடாது. இன்றைக்கு நிலைமை அதனை எல்லாம் தாண்டி சென்றது. அதனால் தான் நான் உங்களிடம் பேசுகிறேன் என கூறினார். என் வீட்டில் இருந்து அலுவலகம் வரை நடந்து செல்லும் போது எந்த பத்திரிகையையும் நான் கூப்பிடவில்லை. இன்றைக்கு நான் பத்திரிகையை அழைத்து பேட்டி அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். இந்த அளவுக்கு அதிகாரிகள் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள். எந்த விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நீதி பெற்று கொடுக்க வேண்டும் என கூறினார்.
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும் இல்லை. அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறியது 2026 தேர்தலுக்குப் பிறகு இருக்கலாம் என்றார்.
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒற்றைப் புள்ளியில் செயல்படுகிறோம். அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது.
ஓரணியில் தமிழ்நாடு முகாமில் இணைந்தால் மட்டுமே ரூ.1,000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று பகிரமங்கமாக தெரிவித்து வலுக்கட்டாயமாக மக்களை கட்சியில் திமுகவினர் சேர்த்து வருகின்றனர். மாம்பழம் விற்பது போல கூவி, கூவி ஆட்களை அவர்கள் சேர்க்கின்றனர்” என்றார்.
ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், சிறந்த பேச்சாளருமான தியாக சுடர் ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழகத்தில் நமது கட்சியின் வளர்ச்சிக்காகவும், தேச நலனுக்காகவும் சமூகப் பணிகள் மேற்கொண்டு வந்த ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்கள், இஸ்லாமியப் பயங்கரவாதிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இன்று நமது கட்சி அடைந்துள்ள வளர்ச்சி என்பது, ஆடிட்டர் ரமேஷ் ஜி போன்றோரின் உயிர் தியாகங்களால் நிகழ்ந்தவையாகும்.
ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் நினைவு தினத்தில், அவரது தியாகத்தையும் சமூகப் பணிகளையும் நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், நமது தமிழக -வின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளரும், சிறந்த பேச்சாளரும், தலைசிறந்த தேசியவாதியுமான அமரர் ஆடிட்டர் ரமேஷ் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியான நாள் இன்று.
அவரது நினைவு தினத்தில் அவரது ஈடு இணையற்ற தியாகத்தைப் போற்றி வணங்குவோம். அவரது வழியில் தேசத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி நம் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்போம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாலை விடுத்துள்ள பதிவில், தேசியச் சிந்தனை மிக்கவராகவும், மிகச் சிறந்த பேச்சாளருமாகத் திகழ்ந்த தமிழக பாஜக முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று காலை பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வணங்கினோம்.
நாட்டின் வளர்ச்சிக்கும், கட்சி வளர்ச்சிக்கும் கடினமாக உழைத்தவர். அவரது கொள்கை உறுதிப்பாடும், மக்களை ஈர்க்கும் பேச்சுத் திறனும், தேசநலன் சார்ந்த சிந்தனைகளும், தேச விரோத பயங்கரவாதிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை. தேசத்திற்காகத் தனது உயிரையே தியாகம் செய்த அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.