திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை குற்றவாளியை கைது செய்யாத நிலையில், அதிமுக தரப்பில், தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு  கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

‘ப்ளீஸ் அங்கிள் என்னை விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க என்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  குழந்தை கதறியபோது “அப்பா” என்று சொல்லும்  @mkstalin,  இந்த பிள்ளை கதறிய போது எங்கே போனார்? என  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, -கேள்வி எழுப்பி உள்ளார்.  மேலும், “திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட நிலையில், ஒரு வாரமாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக-ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

7 நாட்களாகியும் இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சம்பவத்தில் ஈடுபட்டவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாயும் அவர் பிடிபடாமல் இருப்பது போலீசாருக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு  நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. போதை நடவடிக்கைகளும், பாலியல் வன்முறைகளும் கொடி கட்டி பறக்கின்றன. ஆங்காங்கே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் என்றும் பாராமல் போதை மிதப்பில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த இரு நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் போதையுடன் வகுப்பு வந்த நிலையில், அதை கண்டித்த ஆசிரியர் மண்டையில், மதுபாட்டிலை கொண்டு தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோல பல இடங்களில் போதை அடிமைகள், குடிதண்ணீரில் மலம் கலப்பது உள்பட பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இதை கவனிக்க வேண்டிய காவல்துறை அதை கவனிப்பதை விட்டு, அரசை விமர்சிக்கும் நபர்களை மட்டுமே கைது செய்து, தனது விசுவாசத்தை பறைசாற்றி வருகிறது.

முன்னதாக,  திருவள்ளுர் மாவட்ட கும்மிடிப்பூண்டி அருகே  கடந்த சனிக்கிழமை (ஜூலை 12ந்தேதி) , 10 வயதுச் சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பொதுவாகப் பள்ளி நேரம் மதியம் 3 மணிக்கு விடப்படும் நிலையில், அன்றைய தினம் 12 மணிக்கே விடப்பட்டதால், அவர் தனது பாட்டி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் சிறுமியைப் பின்தொடர்ந்த அந்த நபர், தூக்கிச்சென்றுள்ளார். அப்போது அந்த குழந்தை கதற, யாரும் அதை காப்பாற்ற முன்வராத நிலையில், அந்த கொடுமைக்காரன், அந்த சிறுமியை  அவரைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார்.  இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத.

விசாரணையில், பாட்டி வீட்டுக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால், அந்தச் சிறுமி நடந்தே சென்றுக் கொண்டிருந்தபோது, அப்போது அந்தச் சிறுமியைப் பின்தொடர்ந்த மர்ம நபர், சிறுமியை ஆள் இல்லாத இடத்திற்குக் தூக்கிச் சென்று கத்தி முனையில் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார். அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. அங்கிருந்து  சிறுமி  தப்பிக்க முயற்சித்தும், அவரைத் துரத்திப் பிடித்து அடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த நிலையில், காவல் நிலையத்தில் வழக்குக் கொடுத்தும் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தக் கொடுமை குறித்துத் தாய் கூறுகையில், “சனிக்கிழமை மதியம் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சென்றபோது என் மகளை யாரோ ஒருவன் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். எனது மகள் இப்போது ஆபத்தான நிலையில் உள்ளார். ‘ப்ளீஸ் அங்கிள் என்னை விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க‘ என்று சொல்லியிருக்கிறாள். ஆனால், ‘கத்தினால் குத்திக் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டியிருக்கான். என் குழந்தையை அடித்ததில் வாய் எல்லாம் ரத்தம் வந்திருக்கிறது.

என் வீட்டுக்கு அழுதுக்கிட்டே வந்த என் பிள்ளையிடம், ‘என்னம்மா?’ என்று கேட்டபோது, ‘ஒரு இந்திக்காரப் பையன் என்னை பேட் டச் செய்துவிட்டான்’ என்று அழுதாள். குழந்தைக்கு முகமெல்லாம் ரத்தம். அவனை கண்டுபிடித்துச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று அந்தக் தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.  இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. இது குறித்து வீடியோ காட்சிகளும் வெளியாகின. யாரோ ஒரு நபர் சிறுமியைப் பின்தொடர்வதும், உடனே போய் தூக்கிக்கொண்டு ஓடுவதும், அந்தச் சிறுமி தப்பிக்க முயற்சிப்பதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், குற்றவாளியைப் பிடிக்க தமிழக-ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. தலைமையில் 3 டி.எஸ்.பி.க்கள் உள்பட 8 தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கும்மிடிபூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது. அதில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக, அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாடிடடி வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை, குற்றம் செய்கிறவர்களுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது என கடுமையாக சாடியதுடன், கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிகொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவலம் அரங்கேறி உள்ளது.

அந்த குழந்தை தகறும்போல, இந்த அப்பா ஸ்டாலின் எங்கே போனார்? என கேள்வி எழுப்பியதுடன், இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலையில், காவல்துறை தள்ளாடுகிறது என்றவர், அப்பா தனக்கு தானே பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது, அதற்கு உண்டான பொறுப்பில் இருந்து செயல்பட வேண்டும் என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.