சிதம்பரம்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், போகும் வழியான கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
அதன்படி, இன்று காலை சிதம்பரத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை தொடக்கி வைத்தார்.
அதன் பின்னா் சிதம்பரம் அண்ணாகுளம் அருகில் உள்ள புதிய அம்பேத்கர் சிலையை முதல்வா் திறந்து வைத்தார்.
இதனையடுத்து, சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டதன் அடிப்படையில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் லால்புரத் தில் சிதம்பரம் புறவழிச்சாலையில், அமைக்கப்பட்டுள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சோ்த்தவருமான எல்.இளையபெருமாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரது முழுவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து, விழா மேடையில் சிறப்புரையாற்றினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும். இது 150 ஏக்கரில் ரூபாய் 75 கோடி மதிப்பில் தோல் அல்லாத காலணி பூங்காவாக அமையவுள்ளது. இதனால் 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.