சென்னை: இருதய சிகிச்சைக்காக  திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கில்,  அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர். இவர் இந்த வழக்கில் தொடர்புடையவர். இவரை பலமுறை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாமல் சுமார் இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் முன்ஜாமின் கோரிய தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடினயாக  அவருக்கு முன்ஜாமின் வழங்கினார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், இதை ஏற்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில்,  மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக் குமார் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் கடவுச்சீட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் எனத் தெரிவித்தார்.

மேலும், பயணத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக் குமார் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.