திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அம்மாபாளையம் பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது.

நாய் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை விலங்கு நல வாரியம் அறிவித்துள்ளது.

தவிர, கொடூரமான மற்றும் ஆக்ரோஷமான நாய் இனங்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்க்கவும் தடை விதித்துள்ளதுடன் பொது இடங்கள் அல்லது சாலையில் அழைத்துச் செல்லும் போது கயிற்றில் கட்டுவதுடன் அதன் வாயையும் முஸ்ஸல் (muzzle) எனப்படும் கவசம் கொண்டு மூடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாயை சாலையில் வாக்கிங் அழைத்துச் செல்லும் நபர்கள் கயிறு கட்டாமலும், 6 அடிக்கு அதிகமாக 30 அடி நீளம் வரையிலான ரப்பர் கயிறுகளை பயன்படுத்தியும் அழைத்துச் செல்கின்றனர்.

மேலும், பலர் தங்கள் வளர்ப்பு நாய்களின் வாயை மூடிகொண்டு மூடுவதும் இல்லை.

அதேபோல், இருசக்கர வாகனங்களிலும் அவற்றை ஏற்றிக்கொண்டு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் அழைத்துச் செல்வதுடன் அதுவொன்றும் செய்யாது என்று சக மனிதர்களை ஏளனமாக பார்க்கவும் செய்கின்றனர்.

அரசாங்கம் எந்த ஒரு நடைமுறையை அறிவித்தபோதிலும் அதை சக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பின்பற்ற தவறுபவர்களால் நாய் கடி அவலங்கள் தொடர்கிறது.

இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் நாய் உடன் சிறுமி பிஸ்கெட் கொடுத்து விளையாடிய போது கடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அருகில் இருந்தவர்கள் அந்தச் சிறுமியை நாயின் பிடியில் இருந்து காயங்களுடன் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து பொதுவெளியில் சிகரெட் புகைப்பவர்களுக்கு காவல்துறையினர் மூலம் எப்படி அபராதம் விதித்து அது குறைக்கப்பட்டதோ அதே போல் நாய் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பதில் விதியை மீறுபவர்களையும் கால்நடை வளர்ப்புத் துறை அல்லது விலங்கு நல வாரிய அதிகாரிகள் மூலம் கண்காணித்து அபராதம் உள்ளிட்ட ஸ்பாட் பைன் நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.