மாணிக்கநாச்சியார் சமேத பிரகதீஸ்வரர் திருக்கோயில், வடக்கு வீதி, திருவாரூர்

தல சிறப்பு :   இத்தல சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.

பொது தகவல் :  பிரம்மன் காவிரியில் நீராடி வேகமாக கோயிலை நோக்கி நடக்கும்போது, அவரை இடைமறித்து தானே இறைவன் காட்சியருளினார். பிரம்மன் தூரத்தில் வரும்போதே தன்னை அவர் காண வேண்டும் என்பதற்காக நந்திதேவரிடம், என்னை சற்று மறைக்காமல் இரு, என்றார். அதன்படி நந்தி தலையை சாய்த்துக் கொண்டார். அதை விளக்கும் வகையில் நந்தி அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்ப மூலவர் பிரமாண்ட வடிவில் உள்ளார். அம்பாளோ சிறிய வடிவில் எழுந்தருளியுள்ளார். மேற்கு பார்த்த கோயில் மூலவர் மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர்.

திருவாரூர் பெரிய கோயில் நிர்வாகத்தில் உள்ள கோயில் தொன்மையான இந்த கோயில் இன்று திருப்பணியை வேண்டி நிற்கிறது. கோயிலைச்சுற்றியுள்ள பிராகாரம் பிரதோஷ நாட்களில் மட்டும் பக்தர்கள் வலம் வருகின்றனர். இந்து அறநிலையத் துறையின் ஒரு கால பூஜை நிதி உதவித் திட்டத்தால் மாலையில் (சாயரட்சை) பூஜை மட்டும் நடக்கிறது. கோயில் சீர்பெற்று காலை, உச்சிக்காலம், சாயரட்சை மூன்று வேளையும் முக்கண்ணணுக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்பதுதான் பக்தர்களின் ஆசை.

தலபெருமை : பிரம்மனின் பொருட்டு பிறைசூடன் கோயில் கொண்ட இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இங்குள்ள நந்தி விசேஷமான அமைப்பில் உள்ளது. இறைவனை நேரே பார்த்த படி இல்லாமல் முகத்தை வலது பக்கமாகத் திறப்பிக் கொண்டு உள்ளது. புதிய கோயில்களில் கூட காணமுடியாத அருட்காட்சியாக மூலவர் பிரகதீஸ்வரர் பொலிவோடு ஒளி வீசித் திகழ்கிறார். தெய்வ சாந்நித்யம் சன்னிதியில் நிரம்பியிருப்பது பக்தர்களின் உள்ளம் உணரத்தக்க வகையில் ஆனந்த அதிர்வாக உள்ளது.

தல வரலாறு : தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் அமைவதற்கு முன்பே அமைந்தது. திருவாரூர் பிரகதீஸ்வரர் கோயில் இங்கு அம்பாள் மாணிக்க நாச்சியார் என்கிற பெயரோடு விளங்குகிறாள். இதே திருவாரூரில்தான் சிவத் தொண்டு செய்து வந்த பரவை நாச்சியார் மீது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் மையல் கொண்டு, அவரை மணக்கத் துடித்தார். சுந்தரரோடு சேர்வது தனது சிவத் தொண்டுக்கு சேதாரம் ஆகும் என்று எண்ணிய பரவையார், சுந்தரரின் காதலை ஏற்கவில்லை. அதனால், சுந்தரரின் பொருட்டு சிவபிரானே பரவையாரிடம் தூது சென்று மணம் முடித்தார். அதே தலத்தில் உமையவளும் நாச்சியார் எனும் திருப்பெயர் கொண்டு திகழ்வது சிறப்பு.

அம்பிகையின் பெயரால் பெண்ணுக்கு அம்பாள் என முடியுமாறு (சுந்தராம்பாள் வடிவாம்பாள், சவுந்தராம்பாள்) பெயர் வைப்பது போல நாச்சியார் என முடியும் வகையில் (பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்) பெயர் வைப்பது அக்கால வழக்கம் பரவை என்பது திருவாரூரை அடுத்துள்ள ஊர். இவர் பெயரால் விளங்குகிறது. கைலாயத்தில் சிவ பிரானை தரிசித்த பிரம்மன், தங்கள் திருமணம் இமயத்தில் நடந்தேறியபோது, அதனைப் பார்க்க முடியாமல் தென்திசைக்குப் போன அகத்தியருக்கு பாபநாசத்தில் திருமணக் கோலம் காட்டி அருளுனீர் அன்றோ. அதேபோல மணமேடையில் இருந்த வேதிகை முன் அமர்ந்து வேதமந்திரங்களை ஓதியபடி இருந்ததால், அரைகுறையாகக் கண்ட எனக்கும் திருமணக்கோலம் காட்டியருள் வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டார்.

பரமேஸ்வரன் பிரம்மனின் வேண்டுகோளுக்கு இணங்கி, நான்முகனே பூலோகத்தில் பராசரரால் பூஜிக்கப்பட்ட ஆரூர் தலத்திற்கு வருக, அங்கே மணக்கோலம் காட்டி அருள்வோம், என்றார். உடனே பிரம்மதேவர் புறப்பட்டு ஆரூர் வந்தடைந்தார் காவிரியில் நீராடினார் திருக்கோயில் நோக்கி நடந்தார் அவர் கோயிலை அடைவதற்குள் முகூர்த்த நேரம் தாண்டி விடும் என்பதால், வழியிலேயே பிரம்மனை அசரீரியால் அழைத்து பிரான் தனது மணக்கோலத்தை காட்டி, அருளிய இடம் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அமைந்த இடம் பிரம்மன் பரமனின் மணக்கோலம் கண்டு, எனக்கு பிரத்யேகமாக மணக்கோலநாதனாகக் காட்சி தந்த இவ்விடத்தில் தாங்கள் உமையாள் சமேதராக எப்போதும் விளங்கவேண்டும் என்று பிரார்த்தித்தார்.

திருவிழா : பிரதோஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை பூஜை சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.

பிரார்த்தனை : திருமணத்தில் தடை நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன் : பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.