தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவரை இறந்ததாகக் கருதி இறந்துபோன ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கொடுத்தனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 9 ஆம் தேதி, வாரங்கல்-கம்மம் நெடுஞ்சாலையில் விபத்தில் அடிபட்டு குமார சுவாமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதே நாளில், ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் கிடந்த ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதில் ரயிலில் அடிப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமையன்று இறந்த நிலையில் கட்டுமானத் தொழிலாளியான குமார சுவாமி இறந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் அந்த உடலை ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து இறுதிச் சடங்குகளுக்காக அந்த உடலை குமார சுவாமியின் சொந்த ஊரான மைலாரம் கிராமத்திற்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.
இருப்பினும், இறுதிச் சடங்கிற்கு சற்று முன்பு, அந்த உடலில் ஒரு பச்சை குத்தியிருப்பதைக் கவனித்த குமார சுவாமியின் மகள் தனது தந்தையின் உடலில் அதுபோன்ற பச்சை எதுவும் குத்தப்படவில்லை என்பதை உணர்ந்து குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த உடல் பிணவறைக்கு திரும்ப கொண்டுவரப்பட்டதை அடுத்து குமார சுவாமி உயிருடன் இருப்பதையும், இறந்தது அடையாளம் தெரியாத ரயில் விபத்தில் பலியானவர் என்பதையும் மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
மேலும், பிணவறையில் பணியில் இருந்த போலீசார் தவறுதலாக தவறான உடலை ஒப்படைத்ததால் குழப்பம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தவறு குறித்து விசாரணை நடந்து வருவதுடன் ரயிலில் அடிபட்டு இறந்தவர் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.