டெல்லியின் பரா இந்து ராவ் பகுதியில் இன்று அதிகாலை மூன்று மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
தரை மற்றும் இரண்டு தளங்களைக் கொண்ட இந்த வணிக கட்டிடத்தில் இருந்த மூன்று கடைகள் மற்றும் கொடவுன்கள் இடிந்து தரைமட்டமாகின.

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியை ஒட்டிய இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடைகளும் மேல் தளங்களில் கிடங்குகளும் இருந்துள்ளது.
இவற்றில் பை மற்றும் கேன்வாஸ் துணிகள் இருந்துள்ளது, இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1:30 மணிக்கு இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
இதில் அந்த கட்டிடத்தில் உள்ள கடை ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக வேலை செய்து வந்த மனோஜ் சர்மா என்ற 46 வயது இளைஞர் இடிபாடுகளில் சிக்கினார்.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு தகவலளிக்கப்பட்டதை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நபரை மீட்டு இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவத்தில் கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த டிரக்கும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கட்டிடம் பராமரிப்பின்றி இருந்ததாகவும் பொறுப்பற்ற மரணம் குறித்தும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.