இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) அதன் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பிரியா நாயரை நியமித்துள்ளது, இது நிறுவனத்தின் 92 ஆண்டுகால பயணத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

ஜூலை 31, 2025 அன்று பதவி விலகும் ரோஹித் ஜாவா-வைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1, 2025 அன்று அந்தப் பொறுப்பை பிரியா நாயர் ஏற்கவுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம், HUL இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை பிரியா நாயர் பெறுகிறார்.

நிறுவனத்தின் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய வணிகங்களில் ஒன்றான யூனிலீவரில் அழகு மற்றும் நல்வாழ்வுத் துறையின் (Beauty & Wellbeing) தலைவராக தற்போது பணியாற்றுகிறார்.

மும்பையின் சைடன்ஹாம் வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் (1987–1992) கணக்குகள் மற்றும் புள்ளிவிவரங்களில் வணிகவியல் இளங்கலை (BCom) முடித்தார். பின்னர் அவர் புனேவில் உள்ள சிம்பியோசிஸ் வணிக மேலாண்மை நிறுவனத்தில் (1992–1994) சந்தைப்படுத்தலில் MBA பட்டம் பெற்றார். பின்னர், வணிக நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் ஒரு திட்டத்திற்காக ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் பயின்றார்.

1995 இல் HUL இல் சேர்ந்த அவர் வீட்டு பராமரிப்பு, அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு ஆகியவற்றில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

டவ், ரின் மற்றும் கம்ஃபோர்ட் போன்ற முக்கிய தயாரிப்புகளுக்கான பிராண்ட் மேலாளர் பதவியும் அதில் அடங்கும்.

2022 ஆம் ஆண்டில், அவர் யூனிலீவரின் அழகு மற்றும் நல்வாழ்வு (Beauty & Wellbeing) பிரிவின் உலகளாவிய தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார், மேலும் 2023 இல், அவர் அப்பிரிவின் தலைவரானார்.

HUL-இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வரும் ரோஹித் ஜாவா தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் பிற வாய்ப்புகளைத் தொடர பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.