காஞ்சிபுரம்: பிரமாண்டமாக அமைய உள்ள  பரந்தூர் விமான நிலையத்துக்காக, அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பறிமுதல் செய்யப்பட்டு  பத்திரப்பதிவு செய்யப்படுவதாக  மக்கள் புகார் கூறி உள்ளனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 17.52 ஏக்கர் நிலங்கள் ரூ.9.22 கோடி மதிப்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணியின் ஒருபகுதியாக, அங்கு நிலம் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்று கனவுடன் இருந்தவர்களை  வலுகட்டாயமாக அழைத்து வந்து பத்திரப்பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, விரைவில் சட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டங்களுக்கு உட்பட்ட வாலாஜாபாத், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு கடந்த அக்டோபர் 31, 2023-ல் நிர்வாக அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் போராடி வருகின்றனர். இதனிடையே, இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு, உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நில மதிப்பு நிர்ணயம் செய்து, கடந்த ஜூன் 25 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து, பரந்தூர், பொடவூர், நெல்லாய், வணத்தூர் மற்றும் அக்கமாபுரம் கிராமங்களைச் சேர்ந்த பட்டாதாரர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, ரூ.9.22 கோடி மதிப்பிலான 17:52 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பதிவு செய்து கொடுத்தனர்.

இதன் அடிப்படையில், நில உரிமையாளர்கள் அனைவருக்கும் ரூ. 60 லட்சம் முதல் 2 கோடி வரை இழப்பீட்டுத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, கடந்த மூன்று வருடங்களாக போராடி வருகிறோம். இதுதொடர்பாக, விவசாய மக்களிடம் எந்த கலந்தாய்வும் நடத்தாமல், நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டிற்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருகிறது.

ஆனால், பரந்தூர் பகுதி விவசாய மக்கள் ஒரு பிடி நிலத்தையும் கொடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், நேற்று (ஜூலை 9) நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் நபர்களை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக பத்திர பதிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களை கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதைமக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.

விவசாயிகளுக்கு எதிராக ஜனநாயக படுகொலை செய்யும் இந்த அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். உடனடியாக, அனைத்து அரசியல் கட்சிகளின் துணையோடு மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். விவசாய பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சட்ட போராட்டத்திற்கான முன்னெடுப்பு பணி சில நாட்களில் துவக்கும்.

இவ்வாறு கூறியுள்ளனர்.