சென்னை: பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, அதை முடித்து வைக்க முடியாத என்று தெரிவித்துள்ளது.

சைவம், வைணவம் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில், அரசியல்வாதிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீற அனுமதிக்க முடியாது, அரசியல்வாதிகள் ராஜாக்களைப் போல நடந்து கொள்கிறார்கள் என கூறியுள்ள  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  வழக்கை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது, காவல்துறை ஒத்துழைக்க மறுத்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் என எச்சரித்திருந்த நிலையில்,  பொன்முடி பேச்சு குறித்த வழக்கை முடித்து வைக்க முடியாத என காவல்துறையின் கோரிக்கையை மறுத்த நீதிபதிகள்,  புகாரளித்தவருக்கு விளக்கம் கொடுக்காமல் வழக்கை முடித்து வைக்க முடியாது,  என கூறி உள்ளது.

முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தாா்.  இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே திமுக தலைவர்கள் பலர் இதுபோல இந்துக்கள் குறித்தும், இந்த மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் அமைச்சா் பொன்முடியின் பேச்சும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக மீது கடுமையாக விமர்சனம் எழுந்தது.

மேலும், பொன்முடியுன் வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், பலர்  புகார் கொடுத்தும், அதை பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்து வந்தனர். இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக   தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும், பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒருவரை கொன்று விட்டு நான் கொல்ல விரும்பவில்லை என மீண்டும் கூற முடியுமா? சைவம், வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம்போல் கருத்துகள் தெரிவிப்பது சரியா? இதில் நீதிமன்றம் வெறும் பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது  இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? இது ஜனநாயக நாடு என கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது  தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன் ஆஜராகி,   பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம் என்றும் இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் உயரதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான 100-க்கும் மேற்பட்ட புகார்களையும் முடித்து வைத்து விட்டதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து புகார்தாரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர் புகார்தாரர்களிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் புகார்கள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்கமளித்தார்.

அதற்கு நீதிபதி, புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யட்டும். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கட்டும் என்றார். தொடர்ந்து நீதிபதி, இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த கோர்ட் விரும்புகிறது.

மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.  அரசியல்வாதிகள் பெரும்பாலும் பிரிவு 19 ஐ தவறாகப் பயன்படுத்துவதாகவும், “வானமே எல்லை” என்பது போல் செயல்படுவதாகவும்  சாடிய நீதிபதி,

பொன்முடி பொது வாழ்க்கைக்கு வந்தபிறகு நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்குமானது. சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டும் ஆனது அல்ல  குறிப்பிட்ட நீதிபதி,  ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா இல்லையா? என்பது குறித்து விசாரிப்பதுதான். அதன் பிறகு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று தெரிவித்த நீதிபதி, வேண்டாதவர்களுக்கு எதிராகப் புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாகக் கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பிறரின் உணர்வு களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதை தீவிரமாக கருதப்படும் என்று குறிப்பிட்டு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

பொன்முடி பேச்சு குறித்து புகாரளித்தவருக்கு விளக்கம் கொடுத்த பிறகே வழக்கு முடித்து வைக்க முடியும். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டன என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்