மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 20-க்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார்மீது நகை திருடியதாக கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, அஜித்குமாரை காட்டுமிராண்டித்தனமாக அடித்தும், உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தி கொன்றுள்ளது, வீடியோ மூலம் அம்பலமானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் எக்ஸ் தளத்திலும் டிரெண்டிங்கானது. மேலும் உடற்கூறாய்வு அறிக்கையில், அஜித்குமார் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டது, நிரூபணமாகி உள்ளதாகவும் அவரது ஆணுறுப்பு உள்பட உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது. மதுரை கிளை நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு, இந்த கொடூரமான சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக சாடியது. மேலும், இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர் லாலை நியமித்ததுடன், அவர் தனது அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர் லால், கடந்த சில நாட்களாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று, மூடி சீலிடப்பட்ட உறையில் அவர் தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான்குளம் வழக்கு போல, இந்த வழக்கும் தாமதம் ஆகும் என்பதால், அதற்கு தடை விதிக்க கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றினால், இதே குற்றச்சாட்டை எழுப்பும் வாய்ப்புள்ளதாக கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் அஜித்குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கையை படித்து பார்த்தில், இவ்வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துள்ளார்.
மீதி விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் முடிக்க வேண்டும். காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை முறையாக விசாரித்து, ஆகஸ்டு மாதம் 20ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். வழக்கை விசாரிக்கும் அலுவலர்களை ஒருவாரத்தில் நியமிக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.
வழக்கு தொடர்பான விசாரணைக்கு தென்மண்டல காவல் தலைவர், மதுரை, சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்கள், சிவகங்கை ஆட்சியர் சிபிஐ-க்கு உதவ வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த தேவையான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
அஜித்குமார் உடலில் 44 காயங்கள்: விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்