சென்னை: சென்னை பெருங்குடி  பகுதியில் உள்ள சாலையில் நீண்டதூரம் வெடிப்பு  ஏற்பட்டு பூமி பிளந்து காணப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே, கட்டுமான பணி நடைபெற்றுவரும் பகுதியில் உள்ள சாலையின் நடுவே  வெடிப்பு ஏற்பட்டு சுமார் 150 அடி நீளத்திற்கு பிளந்து காணப்படுகிறது. இது பார்ப்போரை அச்சமடைய செய்துள்ளது.   இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலம் 13-வது வார்டுக்கு உட்பட்ட தரமணி – சதாசிவம் பிரதான சாலையில், தனியார் நிறுவனம் ஒன்று கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கட்டிடத்திற்கு அடித்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு கனரக இயந்திரங்கள் மூலம் அதனை பலப்படுத்தும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று இரவு  (ஜூலை 7) கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே உள்ள சாலையில், சுமார் 150 அடி நீளத்திற்கு சாலை நடுவே திடீரென வெடிப்புடன் பிளவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து குடியிருப்புகளை விட்டு வெளியே வந்தனர். இந்த வெடிப்பு குடியிருப்பு பகுதிகளிலும் ஏற்படுமோ என்று அச்சம் அடைந்தனர்.

 இதுகுறித்து உடனே  மாநராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், முதற்கட்ட நடவடிக்கையாக சாலையில் வாகனங்கள் செல்லாத வகையில், தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட பிளவு குறித்து ஆய்வு செய்தனர்.

 தனியார் கட்டுமான நிறுவனம், இயந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்களை வைத்து பள்ளம் தோண்டி அடித்தளம் போடும் பணியில் ஈடுபட்டதன் காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், சாலையில் வாகனம் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் உள்ள சாலையின் நடுவில், திடீரென பள்ளம் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.