கடலூர்:  கடலூர்  அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில், ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம் நிதி உதவி அளிப்பதாக  ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பள்ளி வேன் மீது கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரயில்வே சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டு.

விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06190) சிதம்பரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமாகியுள்ளது. அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர், 1 மாணவி உள்பட மூவர் பரிதாபமாக பலியாகினர். ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் மூவர் பலியாகினர்.

இந்த விபத்தில், அருகே உள்ள சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணியின் மகள் சாருமதி (16), அவரன் மகன் செழியன்(15), விஜயசந்திரகுமாரின் மகன் விமலேஷ்(10) ஆகியோர் பலியாகினர். இந்நிலையில், இவ்விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.