திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மந்திரங்களுடன் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது

முருகப் பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா குடமுழுக்கு விழா 15 ஆண்டுகளுக்குப் பின் இன்று நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 1ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது. ராஜகோபுர வாசல் அருகில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு, 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைத்து காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறுகிறது.

கோயில் உள்ளே மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு தான்ய வழிபாடு, விநாயகர் வழிபாடு, வேள்வி சாலை தூய்மை, வாசனை தான்ய திருக்குட வழிபாடு, தொடக்க நிலை வேள்வி, தொடக்க நிலை வழிபாடு, ஒன்பது கோள் வேள்வி, திருநன்னீராட்டு வழிபாடு, குடமுழுக்கு நன்னீராட்டு திருக்குடத்தில் திருவருள் ஏற்றுதல் ஆகியன நேற்று நடைபெற்றது.

நேற்று  காலை சுவாமி சண்முகருக்கு பத்தாம் கால யாக சாலை பூஜைகளும், மாலை பதினொன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடந்தது. யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசையும், பெண் ஓதுவார்கள் உட்பட 108 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது.

இன்று (7ம்தேதி) காலை 6.24 மணிக்கு குடமுழுக்கு தமிழில் நடைபெறுகிறது. குடமுழுக்குகாக ராஜகோபுரம் அருகே சுவாமி சண்முகர் யாகசாலையில் இன்று அதிகாலை 12ம் கால யாகசாலை பூஜைகளில் மகா நிறைஅவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.15 மணிக்கு மூலவர், சுவாமி சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்க பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், ராஜகோபுரத்திற்கும் விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. இதனை தொடர்ந்து எண் வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், உருகு சட்ட சேவையாகி சண்முக விலாச மண்டபம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகி தீபாரகைக்கு பின் இரவு 7 மணிக்கு சுவாமி சண்முகர், சுவாமி ஜெயந்திநாதர், சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.