2026ல் தே.ஜ.கூ. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பாஜக பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக 40 முதல் 50 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறினார்.

அதனால் 2026 நமது இலக்கு இல்லை 2029 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவது தான் நமது இலக்கு என்று பேசினார்.

தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ள பாஜக இதுவரை தங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உறுதியாக தெரிவிக்க வில்லை.

அதேவேளையில், தே.ஜ.கூ. வெற்றிபெற்றால் தான் தான் முதல்வர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவருவதோடு அதே முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கியுள்ளார்.

இருந்தபோதும் அந்த கூட்டணியில் உள்ள அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் முதல்வர் யார் என்பதை தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணித் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2026ல் தங்கள் கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என்று பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தொண்டர்கள் 2029ஐ இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளதும் பாஜக 40 – 50 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள் என்று கூறியிருப்பதும் முதல்வர் தேர்வில் பாஜக என்ன செய்ய இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.