ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆவியை விரட்டுவதாகக் கூறி ஆசிய சமூகத்தினரைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜூன் மாதம் சிட்னி நகரைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியிடம் இருந்து பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதை விசாரித்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர், ஆவியை விரட்டுவதாகக் கூறி வீட்டிற்கு வந்த ஒரு பெண் அந்த மூதாட்டியிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை மூட்டையாகக் கட்டி பூஜையில் வைக்குமாறு கூறியுள்ளார்.

பின்னர், அந்தப் பொருட்களை புனிதப் படுத்துவதாகக் கூறி அந்த மூதாட்டிக்குத் தெரியாமல் தன்னுடன் கொண்டுவந்த மற்றொரு பையை வைத்து விட்டு அந்த நகை மற்றும் பணம் இருந்த பையை நைசாக சுருட்டிக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தான் சென்ற சிறிது நேரம் கழித்து தான் அந்தப் பையைத் திறக்க வேண்டும் என்று நேரம் குறித்துச் சென்ற நிலையில் அந்தப் பையைத் திறந்த மூதாட்டி அதில் தான் வைத்திருந்த பொருட்கள் எதையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட நிலையில் கடந்த வியாழனன்று சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் இதுதொடர்பாக தேடப்பட்ட 63 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2023ம் ஆண்டு முதல் சிட்னி நகரில் இதுபோன்று 80க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளதாகவும் இதில் மொத்தம் சுமார் 17 கோடி ரூபாய் (3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள்) மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் ஆசிய சமூகத்தை, குறிப்பாக சீனர்களை குறிவைத்து நடத்தப்படுவதாக தெரிவித்த காவல்துறையினர், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அணுக முயற்சிக்கும் அந்நியர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும், அந்நியர்களைத் தங்கள் வீடுகளுக்குள் அழைத்து வர வேண்டாம் என்றும், எந்தவொரு ஆசீர்வாத சடங்கிற்கும் பணத்தையோ அல்லது விலை உயர்ந்த பொருட்களையோ ஒரு பையில் வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.