கோயிலில் கீழே இருந்த 2 ரூபாய் நோட்டை எடுத்தவர் அதற்காக ரூ. 10,000த்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

கீழே விழுவது எல்லாம் தமக்கானது என்று கடவுள் பெயரைக் கூறி பணம் சேர்ப்பவர்கள் ஒருபுறம் இருக்க கோயிலில் கிடைத்த பணத்திற்குப் பதிலாக இப்படி காணிக்கை செலுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

ஈரோடு, அம்மாபேட்டை அருகில் உள்ள நெருஞ்சிப்பேட்டை செல்லாண்டி அம்மன் கோயிலில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் இந்த கோயிலின் உண்டியல் காணிக்கையை கடந்த வெள்ளிக்கிழமையன்று எண்ணியபோது அதில் ஒரு வெள்ளை கவரில் கட்டாக பணம் இருப்பதையும் அதனுடன் ஒரு கடிதம் இருப்பதையும் பார்த்துள்ளனர்.

அந்த கவரில் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ. 10000 பணத்துடன் இருந்த கடிதத்தில், 55 ஆண்டுகளுக்கு முன் இதே கோயிலில் கீழே இருந்து 2 ரூபாய் நோட்டை தான் எடுத்ததாகவும் அதற்காக இந்த பணத்தை காணிக்கையாக அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த 2 ரூபாய் யாருடையது என்று தெரியாமல் அதை ஒப்படைக்க முடியாமல் இத்தனையாண்டு காலம் தவித்து வந்ததாகவும் அதனால் அதற்கு பதிலாக உண்டியலில் தற்போது பணம் செலுத்தியுள்ளதாகவும் அதில் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் அடிப்படையில், 1970ம் ஆண்டு அவருக்கு கிடைத்த அந்த ரூ. 2ன் தற்போதைய மதிப்பு ரூ. 102 என்று கூறப்பட்டாலும், 55 ஆண்டுகாலம் அதைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததற்கு தண்டனையாக ரூ. 10,000த்தை செலுத்துவது தான் சரியென்று அவர் நினைத்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், 55 ஆண்டுகளுக்கு முன் 2 ரூபாயை தவற விட்டது யார் என்பது தெரியாதது போல் தற்போது இந்த 10000 ரூபாயை உண்டியலில் செலுத்தியது யார் என்பதும் அறநிலையத் துறைக்கு இதுவரை எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.