திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வகுப்புத் தோழியுடன் நெருங்கிப் பழகி அவரை தாயாக்கிய பாஜக நிர்வாகியின் மகனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரை அடுத்த புத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தட்சிண கன்னட மாவட்ட மகளிர் காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த புகார் தொடர்பாக புத்தூர் பாஜக தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான ஜெகனிவாஸ் ராவின் மகன் கிருஷ்ணா ஜே. ராவ் (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜூன் 24ம் தேதி மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட புகாரில், “பாஜக கவுன்சிலர் மகன் கிருஷ்ணா ராவ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்ததாகவும், இதையடுத்து அவரது பேச்சை நம்பி அவருடன் உறவு கொண்டதாகவும், பின்னர் தான் கர்பமாக இருப்பது தெரியவந்ததும், தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகவும்” கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் தாயார் புத்தூரில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ‘என் மகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் கிருஷ்ணா ராவ் மற்றும் அவரது தந்தையிடம் முறையிட்டதாகவும் அப்போது தனது மகனுக்கு 21 வயது ஆனவுடன் தனது மகளுடன் திருமணம் செய்து வைப்பதாகவும் உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் எம்எல்ஏ அசோக் குமார் ராய் அவர்களை அழைத்து புகார் அளிக்க வேண்டாம் என்றும், எல்லாம் சுமுகமாக தீர்க்கப்படும் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜூன் 27ம் தேதி தனது மகளுக்கு புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் திருமணம் செய்ய கிருஷ்ணா ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்ததை அடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணா ராவ் தலைமறைவானதாகவும் அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.