சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சி இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களான உதவிபொறியாளர் / இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டம்), வரைவாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய 2569 பணியிடங்களை நிரப்பிட 02.02.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வாளர்களுக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் 29.06.2024, 30.06.2024 மற்றும் 06.07.2024 ஆகிய தேதிகளில் எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்வு பெற்ற தேர்வாளர்களுக்கு அக்டோபர் 2024 ல் தேர்வுக் குழுவால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 24.02.2025 அன்று வெளியிடப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தரவரிசை பட்டியலின்படி, கலந்தாய்வு நடத்தி துறைகள் வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேற்காணும் நேரடித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைவை ரத்து செய்த நிலையில், பணிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் 2,00,499 மாணவர்கள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வுகளுக்குப் பின்னர், 2,569 காலியிடங்களை நிரப்ப தேர்வர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. நேர்முகத்தேர்வு நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கத்துறையில் அனுமதி அளிக்கப்பட்ட 40 சதவிகித காலியிடங்கள நிரப்புவதற்காகவே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்க உத்தரவிட வேண்டும்,”என கூறப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ் மீடியத்தில் படித்த விண்ணப்பதாரர்கள் அல்லது மாணவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வரையறுக்கப்பட்ட பிரச்னையாகும். ஆனால், இடைக்கால உத்தரவில் ஒட்டு மொத்த ஆட்தேர்வு நடைமுறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் நான்கு மாணவர்கள் மட்டுமே வழக்குத் தொடுத்தனர். எனவே, 2569 காலியிடங்களை நிரப்புவது தொடர்பான இந்த ஒட்டு மொத்த நடவடிக்கைக்கு தடை விதித்திருப்பதை நியாயப்படுத்த முடியாது,”என்று கூறினார்.

விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள், “இந்த விஷயத்தில் பரிசீலனை தேவைப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட பிறருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். அதற்கு 6 வாரத்துக்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். ஏப்ரல் 3ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம், ஒட்டு மொத்த நியமனத்துக்கும் விதிக்கப்பட்ட தடை நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் நான்கு காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் மட்டும் இறுதி முடிவு எடுக்கக் கூடாது,”என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து மற்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.