சென்னை: வடசென்னையில் நடைபெற்ற  கலைஞர் நூலகம் திறப்புவிழாவில் கலந்துகொண்ட மாணவி ஒருவர், தனக்கு படிக்க மடிக்கணினி வேண்டும் என்று துணைமுதல்வர் உதயிநிதியிடம் கோரிக்கை வைத்த நிலையில், அன்றைய தினமே அவரது கோரிக்கையை அவரது வீட்டிற்கே சென்று நிறைவேற்றினார்  உதயநிதி. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி  நூற்றாண்டையொட்டி திமுக இளைஞரணி சார்பில் தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகம் திறக்கப்பட்டு வருகிறது. இதுவரை நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,   சென்னை வடக்கு மாவட்டம் – பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி – வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 4 ஆம் ஆண்டு பொறியியல் படிக்கும் சுவிதா என்ற மாணவி தனக்கு மடிக்கணினி வழங்கி கல்விக்கு உதவ வேண்டும் என துணைமுதல்வரிடம் மனு அளித்து இருந்தார்.

இந்த மனுவை ஆராய்ந்த  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாணவி கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அவரது வீட்டிற்கே சென்று புதிய மடிக்கணியை வழங்கினார். மேலும் மாணவி சுவிதா கல்வியில் சிறக்க வாழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.சி.சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை துணை முதலமைச்சர் திறந்துவைத்தார். பின்னர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தமிழ்நாடு முழுவதும் 60 சிலைகளை கலைஞர் அவர்கள் நிறுவினார்கள். அப்படி இராயபுரத்தில் நிறுவப்பட்ட அண்ணா சிலை தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையையும் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.