சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல் செய்யப்படும் என்றும், விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விரைவில் அரசு ஊழியர்கள் மற்றொரு முக்கிய கோரிக்கையான பழைய பென்சன் திட்டத்தையும் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக அரசு பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கடந்த 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது அவைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் 2026 ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவித்த தமிழ்நாடு அரசு தற்போது நடப்பாண்டு அக்டோபர் முதல் அமலுக்கு வரும் என அறிவித்துஉள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பொறுவார்கள் என்றும், மேலும், அறிவிப்பை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.
