டெல்லி: விண்வெளியில் இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும்  என  பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ 2028ம் ஆண்டு முதல் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க  முடிவு செய்துள்ளது. பாரதிய அந்தரிக்ஷ்  ஸ்டேஷன் என்ற  பெயரில் (Bharatiya Antariksh Station – BAS)  2035க்குள் முழுமையான விண்வெளி நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  இந்த திட்டத்தில்,  முதல் விண்வெளி நிலைய தொகுதி 2028ம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரோ  தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 15 நாட்கள் ஆய்வு பணிக்காக சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி, இந்தியா  விண்வெளியில், சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

8நாள் பயணமாக 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான  அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.  பிரதமர் மோடியின் கானா பயணத்தை முடித்துவிட்டு  நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு பாரம்பரிய முறைப்படி மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

 இந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவின் அடுத்தகட்ட விண்வெளி திட்டங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது  ”தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் அடைந்திருக்கிறார்.  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இந்தியர் ஒருவர் நிலவில் நடப்பார், இந்தியாவுக்கென சொந்தமாக விண்வெளி நிலையம் விரைவில் அமைக்கப்படும். இந்தியாவின் வளர்ச்சியில் நீங்கள் அனைவரும் பெருமை கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

புதிய இந்தியாவுக்கு வானம்கூட எல்லை அல்ல. இந்தியாவின் சந்திரயான் நிலவில் இறங்கியபோது, நீங்கள் ஆதரவு அளித்திருப்பீர்கள். தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி புள்ளி எனப் பெயரிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, அதற்கான நடவ்டிக்கைககள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 2035ம் ஆண்டுக்குள் அதற்கான பணிகள் முடிவடைந்து, இந்தியா  Bharatiya Antariksh Station  என்ற தனது சொந்த விண்வெளி மையத்தை விண்வெளியில் நிறுவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்காக Bharatiya Antartiksh Nayak என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

பாரதிய அந்தர்திக்ஷ் ஸ்டேஷன் (Bharatiya Antariksh Station – (B AS,)

பாரதிய அந்தர்திக்ஷ் ஸ்டேஷன்  என்ற பெயரில் இந்தியா விண்வெளியில் மையம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இது இஸ்ரோவின்  லட்சியத் திட்டம் என்றும், 2035ம் ஆண்டுக்குள் ஐந்து தொகுதிகளைக் கொண்ட முழுமையாக செயல்படும் விண்வெளி நிலையத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் லட்சிய விண்வெளி நிலையத் திட்டமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் (BAS), 2028 ஆம் ஆண்டில் அதன் முதல் தொகுதியை ஏவுவதன் மூலம் தொடங்க உள்ளது. இந்த மட்டு விண்வெளி நிலையம் தோராயமாக 52 டன் எடையும் 400-450 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதை யிலும் இருக்கும். இது 3-4 விண்வெளி வீரர்களைக் கொண்ட குழுவை 3-6 மாதங்களுக்கு ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா உருவாக்க உள்ள பாரதிய அந்தர்திக்ஷ் ஸ்டேஷன்  விண்வெளியில் மையம்  பல்வேறு கட்டங்களாக உருவாக்கப்பட உள்ளது., முதல் தொகுதி அடுத்தடுத்த சேர்த்தல்களுக்கான தளமாக செயல்படும். 2035 ஆம் ஆண்டளவில், இந்த நிலையத்துடன் ஐந்து தொகுதிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொகுதிகளுடன் முழுமையாக செயல்படும் என்று  இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நீண்டகால மனித விண்வெளி பயணங்கள் மற்றும் நுண் ஈர்ப்பு விசை சார்ந்த அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னோடியாக, ஏற்கனவே ஜனவரி 2025 இல் விண்வெளி டாக்கிங் பரிசோதனை (SpaDeX Mission) வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதன் மூலம் BAS-க்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் அடையப் பட்டது. இந்த சோதனை, ஒரு மட்டு விண்வெளி நிலையத்தை ஒன்று சேர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு முக்கியமான திறனான, சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை தன்னியக்கமாக டாக் செய்யும் இந்தியாவின் திறனை உறுதிப்படுத்தியது.

BAS திட்டம், ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம் மற்றும் 2040 ஆம் ஆண்டுக்குள் குழுவுடன் சந்திரனில் தரையிறங்குவதற்கான திட்டங்களை உள்ளடக்கிய விண்வெளி ஆய்வுக்கான இந்தியாவின் பரந்த பார்வையின் ஒரு பகுதியாகும்.

குறிப்பாக, இஸ்ரோவின் பாரதிய அந்தாரிக்ஷ் நிலையம் (BAS) மற்றும் நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) பல முக்கிய அம்சங்களில் வேறுபடுகின்றன. விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சியே ISS ஆகும். மறுபுறம், BAS என்பது அதன் விண்வெளி ஆய்வு திறன்களை மேம்படுத்துவதற்கும் அறிவியல் ஆராய்ச்சியை நடத்துவதற்கும் இந்தியாவின் சுயாதீன முயற்சியாகும்.

மேலும், ISS கணிசமாக பெரியது, சுமார் 420 டன் நிறை மற்றும் நீண்ட காலத்திற்கு 7 விண்வெளி வீரர்களை தங்க வைக்கும் திறன் கொண்டது. BAS சுமார் 52 டன் எடையும், 3-6 மாதங்களுக்கு 3-4 விண்வெளி வீரர்களை தங்க வைக்கும் திறனும் கொண்டது.

ISS பல்வேறு நாடுகளால் பங்களிக்கப்பட்ட பல ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொகுதிகளைக் கொண்டுள்ளது. BAS கட்டங்களாக உருவாக்கப்படும், 2028 இல் ஒரு தொகுதியுடன் தொடங்கி 2035 ஆம் ஆண்டுக்குள் ஐந்து தொகுதிகளாக விரிவடையும். இரண்டு நிலையங்களும் பூமியிலிருந்து தோராயமாக 400-450 கிமீ உயரத்தில் ஒரே மாதிரியான சுற்றுப்பாதையில் இருக்கும். ISS ஒரு உலகளாவிய கூட்டாண்மையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் BAS ஒரு தேசிய திட்டமாகும், இருப்பினும் இந்தியா குறிப்பிட்ட பணிகளுக்கு மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்கலாம்.

BAS நுண் ஈர்ப்பு ஆராய்ச்சி, நீண்ட கால மனித விண்வெளி பயணங்கள் மற்றும் சந்திர பயணங்கள் போன்ற இந்தியாவின் பரந்த விண்வெளி ஆய்வு இலக்குகளை ஆதரிப்பதை வலியுறுத்துகிறது. சர்வதேச அறிவியல் பரிசோதனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆர்ப்பாட்டங்கள் உட்பட ISS ஒரு பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ந்து வரும் லட்சியங்களையும், சுற்றுப்பாதையில் ஒரு தன்னிறைவு இருப்பை நிறுவுவதற்கான அதன் விருப்பத்தையும் BAS பிரதிபலிக்கிறது.

வெற்றிகரமாக இணைக்கப்பட்டது ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள்! இஸ்ரோ சாதனை…. பிரதமர் மோடி வாழ்த்து…

SpaDeX டாக்கிங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரோ! வீடியோ….