சென்னை: பாமகவில் இருந்து, பா.ம.க. கொறடா அருளை அன்புமணி பதவி நீக்கம் செய்துள்ள நிலையில், அவரை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி மற்ற 4 பாமக எம்எல்ஏக்கள் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்துள்ளனர்.
பாமகவில் மொத்தம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 4 பேர் சேர்ந்து மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து, பா.ம.க. சட்டசபை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. ஒருவரை மாற்றி ஒருவரை இருவரும் மாற்றி மாற்றி நீக்குவதும், சேர்ப்பதுமானவும் இருந்து வருகின்றனர். நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். சமீபத்தில் சேலத்தில் பொதுக்குழுவை கூட்டிய அன்புமணியின் கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள் பங்கேற்பரைத தவிர்க்கும் வகையில் நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் படுத்துக்கொண்டதும், அதைத்தொடர்ந்து, அவரது உடல்நிலை தேற மேடையிலேயே அன்புமணி பிரார்த்தனை செய்ததும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம்தொகுதி பாமக எம்எல்ஏ அருள், அன்புமணியை கடுமையாக விமர்சித்ததுடன், ராமதாஸ்தான் தலைவர் என உறுதிப்பட கூறினார். இதையடுத்து, சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதற்கு எதிர்வினை ஆற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை தலைமைச்செயலகம் சென்று, சட்டசபை அலுவலகத்தில் சட்டப்பேரவை செயலரை சந்தித்து, சட்டமன்றக்குழு கொறடா அருளை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி மனு அளித்தனர்.
பாமகவில் மொத்தம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், மற்ற 4 பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை நியமிக்கவும் சட்டப்பேரவைச் செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அருள் நீக்கப்பட்டுள்ளார். பா.ம.க. சட்டசபை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பாமகவில் இருந்து நீக்கம்! அன்புமணி அறிவிப்பு…
சேலம் எம்எல்ஏ அருளை பாமகவில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! ராமதாஸ்