சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ.27,000 கோடியில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கடல் வழி சாலை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மின்சார ரயில், மாடி ரயில், மெட்ரோ ரயில் மட்டுமின்றி ஏராளமான பேருந்துகளில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் புறநகர் பகுதிகள் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
இந்தநிலையில் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்தை இணைக்கும் வகையில், எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 92 கிலோமீட்டர் தூரத்திற்கு, கடல்வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, எண்ணூர் முதல் பூஞ்சேரி வரை, கடல் வழி சாலை அமைப்பதற்கான சாத்திய கூறு அறிக்கையை தயாரிக்க, ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தோராயமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, ரூ.27,600 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு இ.சி.ஆர் கடல்வழி மேம்பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக ரூ.5400 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ.9000 கோடியிலும், மூன்றாவது கட்டமாக ரூ.13,200 கோடியிலும் செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கடல் வழி பாலமாக அமைக்கப்பட உள்ளதால், சுற்றுச்சூழலுக்கு மற்றும் கடல் வளம் பாதிக்காத வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தும் போது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.