சிவகங்கை: கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகளை  தனது மொபைல் மூலம் பதிவு செய்த இளைஞருக்கு, காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

திருபுவணம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமாரை  போலீசார் காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்த காட்சிகளை தனது மொபைலில் படம் எடுத்தவர் அந்த பகுதியைச்சேர்ந்த சக்தீஸ்வரன். அ ஜித்குமார் மரண வழக்கில் மிக முக்கியமான சாட்சியமாக இந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.  இதனால், கைது செய்யப்பட்ட காவல்துறையினரிடம் இருந்தும், காவல்துறையினருக்கு ஆதரவான ரவுடிகளிடம் இருந்தும்  மிரட்டல் வந்த நிலையில், தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், திருப்புவனம் இளைஞரை தாக்கும் காட்சியை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக,  அஜித்குமார் மரண வழக்கின் நேரடி சாட்சியான சக்தீஸ்வரன், டிஜிபிக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில நான் நேரடி சாட்சி. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தேன். இதனைத் தொடர்ந்து எனக்கு தேவைப்பட்டால் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான தனிப்படை காவலர் ராஜா, பல்வேறு குற்றப் பின்னணி உள்ள ரவுடிகளுடன் தொடர்புடையவர். கடந்த ஜூலை 28-ந் தேதி அவரை சந்தித்த போதே என்னை கடுமையாக மிரட்டினார். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி எனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல்துறை அவரது வீட்டுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல்! அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சி டிஜிபிக்கு கடிதம்…