சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அறப்போர் இயக்கம் வழக்கில், ஒரு வாரத்தில், தமிழ்நாடு அரசு பதில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ397 கோடிக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2021-23ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ1,183 கோடி மதிப்பில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இம்முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர்- நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வருகிறார். கடந்த ஜூன் 13-ந் தேதி விசாரணை நடைபெற்ற போது, செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதைடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜிமீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விவரங்கள் கேட்க ஒரு வார அவகாசம் வேண்டும் என அரசு கேட்டது. இதையடுத்து,. ஒரு வாரம் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, அறப்போர் வெளிக்கொண்டு வந்த செந்தில் பாலாஜி மீதான, ரூ 400 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகார் மீது லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டி அறப்போர் தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட பலருக்கும் நீதிமன்ற நோட்டீஸ் கொடுக்க ஏற்கனவே ஆணையிடப்பட்டு அது அனுப்பப்பட்டதையும் இன்று உறுதி செய்யப்பட்டது. வாதங்களுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.