திருபுவனம்: அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’ என விசிக தலைவர் திருமாவளவன், திரும்புவனத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம் என  கடுமையாக சாடினார்.

மேலும், “போலீசார் சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட ரவுடிகள்” என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (29) மீதான திருட்டு புகாரில், காவலுதுறையினரால் காட்டுமிராட்டிதனமான தாக்குதலில் உயிரிழந்தார். தொடர் விசாரணையின் போது அவர் காவல்நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார் என காவல்துறையினர் கூறிய நிலையில்,  அஜித்குமாரை சில காவலர்கள் சேர்ந்து  தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்மூலம் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டது உறுதியானது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையான உத்தரவுகளை பிறப்பிட்டது.  அஜித்குமாரின்  உடல் உடற்கூறாய்வு அறிக்கையில், உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தாகவும், அவரின் கண், வாய் உள்ளிட்ட இடங்களில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தப்பட்டதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், காவல்துறையினரையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தது.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். அரசு சார்பில் இலவச  உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், உயிரிழந்த அஜித்குமார் வீட்டுக்கு சென்ற விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அஜித்குமாரின் வீட்டிற்கு சென்ற திருமாவளவன் அவரின் புகைப்படத்திற்கு மலர்தூரி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலையிட்டு நடவடிக்கை எடுத்திருப்பது ஆறுதலை தருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருப்பது முதலமைச்சரின் நேர்மையை காட்டுகிறது.

அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பியை சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்தோம். FIR பதிவு செய்யப்படாத வழக்கில் காவல்துறையினர் புலன் விசாரணையை தொடங்கக்கூடாது என்பதுதான் சட்டம். FIR பதிவு செய்யாத வழக்கில் எதன் அடிப்படையில் இதனை அரங்கேற்றினார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. வழக்கமான காவல்நிலையத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவின் ஆய்வாளர் முதலில் இந்த புகாரை பெற்றிருக்கிறார். சிஎஸ்ஆர்ஐ சந்திருக்கிறார். எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். எஃப்ஐஆர்-ம் போடவில்லை. புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை மட்டும்தான் தந்திருக்கிறார்.

இதற்கிடையே, DSP தலைமையிலான தனிப்படையினர் எதன் அடிப்படையில் இந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்கள். FIR இல்லாமல் விசாரித்தது அத்துமீறல். பின்னர் கொடூரமான தாக்குதலை நடத்தி படுகொலை செய்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கார்குண்டே, வி.ஆர். கிருஷ்ண ஐயர் போன்றவர்கள், “போலீசார் சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட ரவுடிகள்” என தெரிவித்திருக்கின்றனர்.

அந்த அளவிற்கு தேசிய அளவில் காவல்துறையினரின் அதிகார ஆணவம் அவ்வப்போது வெளிப்பட்டிருக்கிறது. அவர்களை மனித உரிமை உணர்வுள்ளவர்களாக விழிப்புணர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரின் புலன் விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என 11 கட்டளையை உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களை எந்த காவல்துறை அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை. இந்த வழக்கில் சீருடை அணியாமல், வழிப்போக்கர் போல, கூலிப்படை போல வந்த அஜித்குமாரை தாக்கியுள்ளனர்.

இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லாத அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அரச பயங்கரவாதம். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஒரு உயிரை மீட்க முடியாது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை பிணையில் வெளிவிடாமால், விரைந்து விசாரிக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் நீதி வழங்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். அடித்து சித்ரவதை செய்தால் உண்மையை சொல்வார்கள் என்று போலீசாருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. நானும் இதுபோன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். போலீசார் துப்பாக்கியை என் வாயில் வைத்து மிரட்டினார்கள். போலீசாருக்கு மனித உரிமை என்றால் என்ன? என்று பயிற்சி கொடுக்க வேண்டும்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்….