விருதுநகர்: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அம்மாவட்ட எஸ்பி. “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டி விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து பொதுமக்கள் மேலும் குரல் கொடுத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஜூலை 1 காலை நடைபெற்ற வெடிவிபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் போராட்டம் செய்பவர்களை கடுமையாக எச்சரித்தார். ஆனால், அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். மேலும் போலீசார் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனால் கடுப்படைந்த எஸ்பி கண்ணன், , “இதுக்கு மேல் ஆளுக்கு ஆள் கோஷம் போட்டீர்கள் என்றால் வேற மாதிரி ஆயிடும்.. ஒழுங்கா இருந்துட்டு உங்க வேலையை பாருங்க” என மிரட்டும் வகையில் எச்சரிக்கை விடுத்தார்.
எஸ்பி.யின் மிரட்டலால் போராட்டக்காரர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும், எஸ்பிக்கு எதிராக குரல் எழுப்பினர். மேலும், மிரட்டும் எஸ்பியிடம் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தங்களை மிரட்டுகிறீர்களே, நீங்கள் என்ன செய்து விடுவீர்கள், “என்ன ஆகிவிடும், துப்பாக்கியை எடுத்து சுடுவீர்களா? சுடுங்க” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக காவல்துறையினரின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை 25க்கும் மேற்பட்ட லாக்கப் டெத்கள் நடைபெற்றுள்ளதுடன், பல பாலியல் சம்பவங்களிலும் காவல்துறையினர் இடம்பெற்றுள்ளதுடன், போதை பொருள் ஆசாமிகளுக்கு ஆதரவாக செயல்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
இதுமட்டுமின்றி அரசு மற்றும் காவல்துறை குறித்து குறை கூறுபவர்களை நள்ளிரவில் கைது செய்து அராஜகம் செய்து வருவதுடன், குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவர்களை என்கவுண்டர் செய்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதுமட்டுமின்றி, சிறு வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளின் கை கால் அடித்து உடைத்து, வழுக்கி விழுந்து விட்டதாகவும் கூறுகின்றன. சமீபத்தில் திரும்புவனத்தில் அஜித் என்பவர் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலால் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழக காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை எடுத்தி வருகின்றன.