சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது ரூ.2லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது விஜயுடன், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் இருந்தார். பின்னர், தவெக தலைவர் விஜய், ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியதாக உயிரிழந்த அஜித்தின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தனது அண்ணன் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டது குறித்து தன்னிடம் விவரம் கேட்டதாகவும், இந்த கொடூரமான செயல், தனக்கு ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியதுடன், உரிய உதவிகளை செய்வதாக உறுதி அளித்தாகவும் கூறினார் என அஜித் சகோதரர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் திரும்புவனம் பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளிமீது கோயிலுக்கு வந்த ஒரு குடும்பத்தினர் அளித்த திருட்டு புகாரின் பேரில், சிறப்பு படை போலீசார், அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அஜித்குமார் வலிப்பு வந்து இறந்ததாக காவல்துறையினர் கூறினர். ஆனால், அதை ஏற்க பொதுமக்கள் மறுத்த நிலையில், அஜித்குமாரை போலீசார் தாக்கியதாக பலர் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கிடையில், போலீசாரால் அஜித் தாக்கப்படுவது தொடர்பாக ஒருவர் எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, இது லாக்கப் மரணம் என உறுதி செய்யப்பட்டு, சிறப்பு படை போலீசார் சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
மேலும், அஜித்குமாரின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி,ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரித்து தமிழ்நாடு அரசையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தது. மேலும் அதிமுக, பாஜக தரப்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இதையடுத்து, வேறு வழியின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தை சந்திக்க அமைச்சர் பெரிய கருப்பனை அனுப்பியதுடன், அவர்களது குடும்பத்துக்கு இலவச வீட்டு மனை பட்டா, தம்பிக்கு அரசு வேலை அத்துடன் அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தது. இதுவும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. சாட்சிகளை சமாதானப்படுத்த அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மறைந்த காவலாளி அஜித்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் விஜய் சம்பவம் குறித்து கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கலையும், வறுத்தத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ரூ.2 லட்சம் நிதியும் வழங்கியுள்ளார்.