சென்னை
திருவொற்றியூர் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு 12 ஆம் வகுப்பு மாணவர் உயீரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான்தெருவை சேர்ந்தவர் அல்தாப். அல்தாப்பின் மகன் நவ்பில் (வயது 17) வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று இரவு டியூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அவர் வரும் போது வீட்டின் வெளியே சாலையில் தேங்கியிருந்த மழைநீரில், சேதமடைந்த மின்ஒயர் பட்டதில் மின்கசிவு ஏற்பட்டுள்ளதை கவனிக்காத நவ்பில் நீரில் கால் வைத்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். திருவொற்றியூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.