டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்த பாஜக ரேகா குப்தா தலைமையில் ஆட்சி செய்து வருகிறது.

முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015 முதல் 2024 வரை தங்கியிருந்த பங்களாவை அருங்காட்சியகமாக மாற்றப் போவதாக தற்போதைய முதலவர் ரேகா குப்தா கூறிவருகிறார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பொறுப்பேற்றது முதல் டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ் நிவாஸ் மார்க்கில் உள்ள இரண்டு பங்களாக்களை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது.

அதற்காக பொதுப்பணித் துறை மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது இது வரும் ஜூலை 4ம் தேதி இறுதி செய்யப்பட உள்ள நிலையில் இதற்கான பணிகளை 60 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் ரேகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு பங்களாக்களில் ஒன்றில் அவர் தங்குவார் என்றும் மற்றொன்றை அவர் தனது முகாம் அலுவலகமாகப் பயன்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த இரண்டு பங்களாக்களையும் மொத்தம் ₹60 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதில், ₹9.3 லட்சம் மதிப்புள்ள ஐந்து டிவிக்கள் நிறுவப்பட உள்ளன. ₹7.7 லட்சம் மதிப்பில் 14 ஏர் கண்டிஷனிங் யூனிட்களும், ₹5.74 லட்சம் மதிப்பில் 14 சிசிடிவி கேமராக்களும் நிறுவப்பட உள்ளன. ₹2 லட்சம் மதிப்புள்ள UPS நிறுவப்பட வேண்டும் என்றும் அந்த டெண்டரில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, ரிமோட்களுடன் கூடிய 23 மின்விசிறிகள் ₹1.8 லட்சம், டோஸ்ட் தயாரிக்கும் கிரில் (₹85 ஆயிரம்), ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் (₹77 ஆயிரம்), டிஷ் வாஷர் (₹60 ஆயிரம்); ஒரு கேஸ் அடுப்பு (₹63 ஆயிரம்), ஒரு மைக்ரோவேவ் அடுப்பு (₹32 ஆயிரம்) மற்றும் ஆறு கீசர்கள் (₹91 ஆயிரம்) நிறுவப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 115 விளக்குகள் நிறுவப்பட வேண்டும். இதில் சுவரில் பொருத்தப்பட்ட மற்றும் தொங்கும் விளக்குகள் மற்றும் மூன்று பெரிய ஜூமர்கள் அடங்கும். இதற்காக ₹6.03 லட்சம் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.