ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னோடியில்லாத தாக்குதல்களை நடத்தி வருகிறார்.
ரஷ்யாவின் இந்த தாக்குதலை “மிருகத்தனமான மோதல்” என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்காக ரஷ்யாவை தண்டிக்க திட்டமிட்டுள்ளார்.
யுத்த வெறி பிடித்த ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றவுள்ளது.

இந்த மசோதா குறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், “ரஷ்யா மீது கடுமையான புதிய தடைகள் மசோதாவை வாக்கெடுப்புக்குக் கொண்டுவர ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். மசோதாவை ஆதரிக்கும் கிரஹாம், இந்த வளர்ச்சியை “பெரிய திருப்புமுனை” என்று அழைத்தார், இது உக்ரைன் மீது பேச்சுவார்த்தை நடத்த புடினுக்கு அழுத்தம் கொடுக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த மசோதா, உக்ரைனை ஆதரிக்காமல் ரஷ்ய பொருட்களை வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு 500% வரி விதிக்க முன்மொழிகிறது. ரஷ்யாவின் எண்ணெயில் கணிசமான பகுதியை வாங்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை இது குறிவைக்கிறது.
இந்த மசோதா காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டால், தடைகளைத் தள்ளுபடி செய்யவோ அல்லது மசோதாவை வீட்டோ செய்யவோ டிரம்புக்கு அதிகாரம் உள்ளதாக கிரஹாம் தெரிவித்துள்ளார். 84 பேர் இந்த மசோதாவை ஆதரிப்பதை அடுத்து இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று கிரஹாம் நம்பிக்கை தெரிவித்தார். இது ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவுக்கு எதிரான “பொருளாதார பதுங்கு குழி அழிப்பு” என்றும் அவர் விவரித்தார்.