மதுரை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட டிஐஜி வீ. வருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் அவதூறு தகவல்களை பரப்பி, உள்நோக்கத்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார். இதனால் நானும், என் குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். அவர் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அவர் ரூ. 2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில், டிஐஜி வருண்குமார் கடந்த 2024ம் ஆண்டு  டிச.30ம் தேதி ஆஜராகி, புகார் குறித்து சாட்சியம் அளித்தார். அத்துடன் புகார் தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவு (பென்டிரைவ்), பத்திரிக்கை செய்திகள் தன்னால் வழங்கப்பட்டது என்பதையும் டிஐஜி உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை 2025 ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தின விசாரணையின்போது,    டிஐஜி தரப்பு சாட்சிகளாக புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியை சேர்ந்த கார்த்திக் ராஜா (33) , கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு சாட்சியங்களை பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு ஏற்கனவே சீமான் ஆஜரான நிலையில், அடுத்தடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின்போது, வருண்குமார் தொடர்ந்த அவதூறு  வழக்கு விசாரணைக்கு  ஏற்புடையதல்ல என சீமான் தரப்பு திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயா முன்பு வாதாடினார். இந்த வழக்கை ரத்து செய்யவும் முறையிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்று கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி திருச்சி நீதிபதி விஜயா உத்தரவிட்டிருந்தார். மேலும், ஜூலை 7-ம் தேதி சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீது இன்று  விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த  நீதிபதி விக்டோரியாகௌரி, திருச்சியில் விசாரிக்கப்பட்டு வரும் டி.ஐ.ஜி.வருண்குமார் வழக்கிற்கு இடைக்காலதடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.