சென்னை
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கும் வழித்தடங்கள் குறித்த விவரம் இதோ

எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
எனவே உலக வங்கி உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி (ஜி.சி.சி.) ஆயிரத்து 225 மின்சார தாழ்தள பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஓம் குளோபல் மொபிலிட்டி’ நிறுவனத்துடன் போடப்பட்டு உள்ளது.
இவற்றில் 400 பஸ்கள் ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பஸ்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது ‘ஓம் குளோபல் மொபிலிட்டி’ நிறுவனம்தான். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கண்டக்டர்கள் பணியமர்த்தப்பட்டு டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவாய் ஈட்டப்படும். இந்த 625 தாழ்தள மின்சார பஸ்களில் முதல் கட்டமாக 120 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) சென்னை வியாசர்பாடி பணிமனையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
மின்சார பஸ்கள் இயக்கப்படும் 11 வழித்தடங்கள்
- வழித்தட எண்: 2பி- கவியரசு கண்ணதாசன் நகர்-அண்ணா சதுக்கம்- கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்) – 10 பஸ்கள்.
- 18ஏ- பிராட்வே-கிளாம்பாக்கம் – 20 பஸ்கள்
- சி33- கவியரசு கண்ணதாசன் நகர்-பிராட்வே-கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்) (செல்லும் போது-மகாகவி பாரதி நகர் வழி, வரும் போது- மூலக்கடை வழி) – 5 பஸ்கள்.
- சி64- கவியரசு கண்ணதாசன் நகர்-பிராட்வே-கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்) (செல்லும்போது மூலக்கடை வழி, வரும்போது- மகாகவி பாரதி நகர் வழி) – 5 பஸ்கள்.
- 37- பூந்தமல்லி-வள்ளலார் நகர் (குமணன்சாவடி வழியாக) – 10 பஸ்கள்.
- 46ஜி- மகாகவி பாரதி நகர்-கோயம்பேடு (அரும்பாக்கம் வழியாக) – 10 பஸ்கள்.
- 57- வள்ளலார் நகர்-செங்குன்றம் – 10 பஸ்கள்
- 57எக்ஸ்- வள்ளலார் நகர்-பெரியபாளையம் – 10 பஸ்கள்.
- 164இ- பெரம்பூர்-மணலி – 10 பஸ்கள்.
- 170டி.எக்ஸ்- மகாகவி பாரதி நகர்- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் (மூலக்கடை, கோயம்பேடு வழியாக) – 20 பஸ்கள்.
- 170சி- திரு.வி.க.நகர்-கிண்டி திரு.வி.க. எஸ்டேட் (கொளத்தூர், கோயம்பேடு வழியாக) – 10 பஸ்கள்.