கர்நாடக மாநிலத்தில் பருவமழை முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை ஜூன் மாதமே அதன் முழு கொள்ளளவை எட்டியது.
தொடர் மழை காரணமாக அணையில் இருந்து உபரி நீர் கடந்த சில தினங்களாக திறக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டின் மேட்டூர் அணையும் நிரம்பியது.

இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கே.ஆர்.எஸ். அணையை விவசாய பாசனத்திற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், “கிருஷ்ணராஜசாகர் அணையின் 93 ஆண்டுகால வரலாற்றில் ஜூன் மாதத்தில் அது நிரம்புவது இதுவே முதல் முறை” என்று குறிப்பிட்டார்.
இந்த அணை 93 ஆண்டுகளில் 76 முறை நிரம்பியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் வறட்சி ஏற்பட்டதாகத் தெரிவித்த அவர், தற்போது ஜூன் மாதமே விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரலாற்றில் மீண்டும் இடம்பிடித்துள்ளது என்றும் கூறினார்.