சவுதி அரேபியாவில், பக்காலாக்கள் எனும் சிறிய கடைகளில் இனி பேரீச்சம்பழம், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், புகையிலை, சிகரெட், ஷிஷா அல்லது இ-சிகரெட்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சில்லறை விற்பனைத் துறையை மறுசீரமைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி நகராட்சி மற்றும் கிராமப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பேரீச்சம்பழம், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், மற்றும் புகையிலைப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டில் மட்டுமே விற்பனை செய்யமுடியும்.

தவிர, மளிகைக் கடைகள் குறைந்தபட்சம் 250 சதுர அடியில் இருக்கவேண்டும் என்றும், சூப்பர் மார்க்கெட்டுகள் குறைந்தபட்சம் 1000 சதுர அடியும் ஹைப்பர் மார்கெட்டுகளுக்கு குறைந்தபட்சம் 5000 சதுர அடி இடமும் இருக்க வேண்டும் என்று வரையறை செய்துள்ளது.

இதில், இறைச்சி விற்பனைக்கு சூப்பர் மார்கெட்டுகள் தனியாக உரிமம் பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது, ஆனால் ஹைப்பர் மார்கெட்டுகளுக்கு இந்த நிபந்தனை கிடையாது.

இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும், தற்போதுள்ள கடைகளுக்கு இந்த புதிய நடைமுறையை முழுமையாக செயல்படுத்த ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.