சென்னை:  வடசென்னை வியாசர்பாடி அடுத்த மகாகவி பாரதிநகர் மாநகர பேருந்து பணிமனையில், ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்

சென்னை வியாசர்பாடி அருகே உள்ள எம்கேபிநகர் மாநகர பேருந்து பணிமனையில்,  மின்சாரப் பேருந்து பணிமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அத்துடன்,  சென்னையில் முதன்முறையாக அரசு மின்சாரப் பேருந்து சேவை யும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே டீசல் பேருந்துகள் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது மின்சார பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளது.

அதன்படி,  சென்னையில் முதற்கட்டமாக 120 தாழ்தள மின்சார பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை  தொடங்கி வைத்தார்.

 சென்னை மாநகர போக்குவரத்து கழகமானது எரிபொருள் செலவை குறைப்பதற்காகவும் சென்னையில் காற்று மாசுவை கணிசமாக கட்டுப்படுத்துவதற்காகவும் கூடுதல் வசதி கொண்ட தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்தது.  அதன்படி உலக வங்கியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி 1225 மின்சார தாழ்தள பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் போடப்பட்டது. இதில் 400 பஸ்களை ஏசி அல்லாத பஸ்களும் 225 ஏசி பஸ்களும் அடங்கும்.

இந்த மின்சார பஸ்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது ஓம் குளோபல் நிறுவனம் ஆகும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கண்டக்டர்கள் பணியமர்த்தப்ப்டடு டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்படும். இதில் 625 பேருந்துகளில் முதல் கட்டமாக 120 மின்சார பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை காலை வியாசர்பாடி பணிமனையில் நடைபெறவுள்ள விழாவில் தொடங்கி வைத்தார்.

இந்த மின்சார பேருந்தில் ஆட்டோ கியர் சிஸ்டம் இருப்பதால் கிளட்சை மிதிக்க தேவையில்லை. டீசல், சிஎன்ஜி போன்று அதிக வெப்பத்தையும் உமிழாது. பேருந்துகளில் பாதுகாப்பு கருதி 7 சிசிடிவி கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஏறி இறங்கும் வகையில் இந்த பேருந்து அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த பஸ் நிறுத்தம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும். இருக்கையின் கீழ் செல்போன் சார்ஜ் போடும் பாயிண்ட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் எல்இடி லைட்டுகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட வசதிகள் அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.