பூரி ஜெகநாதர் கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலை “பெரிய சோகம்” என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஒடிசா அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள உலக புகழ்பெற்ற ஜெகநாதர் கோயில் ஆண்டுத் தேரோட்டம் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது.

முதல் நாள் தேரோட்ட நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடிய நிலையில் அங்கு பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது.

இருந்தபோதும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிடும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டது.

இந்த நிலையில் பூரியில் உள்ள குண்டிச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் உருட்டுக்கட்டைகளுடன் இரண்டு லாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரத யாத்திரையைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் அருகே கூடியிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.

நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், ‘இதுபோன்ற பெரிய நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை ஏற்பாடுகள் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாப்பது மிக முக்கியமானது. “இந்தப் பொறுப்பில் எந்தவொரு குறைபாடும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் கூறினார்.

துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புவதாகவும் அவர் பதிவில் எழுதியுள்ளார்.