சீன கண்காணிப்பு கேமரா உற்பத்தியாளரான ஹிக்விஷனுக்கு தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக கனடாவில் செயல்பாடுகளை நிறுத்த கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி வெள்ளியன்று தெரிவித்தார்.
ஹாங்சோ ஹிக்விஷன் டிஜிட்டல் டெக்னாலஜி கோ என்றும் அழைக்கப்படும் ஹிக்விஷன், சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் மக்கள் மற்றும் பிற முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவியாக பல துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக அங்குள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர்.

இதையடுத்து கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் உபகரணங்கள் மற்றும் பரிவர்தனைகளுக்கு அமெரிக்கா ஏராளமான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது அதன் அண்டை நாடான கனடாவில் அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோலி, “கனடாவில் ஹிக்விஷன் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது,” என்று கூறியுள்ளார், கனடாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை வழங்கிய தகவல்களை பல கட்ட மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் சீனா அல்லது ஜின்ஜியாங் பற்றி குறிப்பிடப்படவில்லை அல்லது ஹிக்விஷன் கனடாவின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் குறிப்பிடவில்லை.
அதேவேளையில், “கனடாவின் இந்த முடிவு தங்களுக்கு கவலையளிப்பதாகவும், இது அடிப்படை ஆதாரமற்ற, நியாயமற்ற செயல் என்றும் இதில் வெளிப்படைத் தன்மை இல்லை” என்றும் ஹிக்விஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், “எங்கள் தொழில்நுட்பத்தை அதன் சைபர் பாதுகாப்பு தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிடுவதற்குப் பதிலாக, எங்கள் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை வைத்து கனடா அரசு செயல்படுவதாகத் தெரிகிறது, இது பரந்த புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிரான நியாயமற்ற சார்புகளை பிரதிபலிப்பதாக உள்ளது” என்றும் அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.