சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில்  40 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை  சென்னை மாநகராட்சி தொடங்கி  உள்ளது.

மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை சேகரித்து, சேமித்து, மறுபயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் ஒரு முறையாகும். இது நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், வறட்சியைத் தடுக்கவும், வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கூரைகளில் இருந்து மழைநீரை சேகரித்து, நிலத்தடி தொட்டிகளில் சேமித்து வைக்கும் அமைப்புகளாகும். மேலும்,  மழைநீரை நிலத்தில் சேகரித்து, நிலத்தடிக்குச் செல்ல அனுமதிப்பதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழைநீர் சேகரிப்பு, நகர்ப்புறங்களில் நிலவும் நீர் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு சிறந்த வழியாகும், குறிப்பாக கோடைக்காலத்தில். மேலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், அதிக மழை பெய்யும் காலங்களில், வெள்ளப் பெருக்கைத் தடுக்க உதவுகின்றன.

சென்னை பெருநகரில் பருவமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்து பணிகளை  ஜரூராக தொடங்கி உள்ளது.

இந்த திட்டத்தின்படி,  முதற்கட்டமாக கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள இந்திரா காலனி மைதானம், மாதிரி பள்ளி மைதானம், ஆர்.ஏ.புரம் செயின்ட் மேரிஸ் விளையாட்டு மைதானம், தி.நகர் ஸ்ரீ வெங்கட்நாராயணா மைதானம், டிரஸ்ட்புரம் மைதானம், கிரசண்ட் பள்ளி மைதானம், மேயர் ராமநாதன் சாலை ஆகிய ஏழு விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டமானது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிதியுதவியின் கீழ், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டு திடல்களிலும் தலா, 1.6 கோடி ரூபாய் மதிப்பில், தலா 5 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது ..ஒவ்வொரு கட்டமைப்பும், 25 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. விளையாட்டு மைதானத்தில் பெய்யும் மழைநீர், இக்கட்டமைப்பு பகுதியில் வந்து சேரும் வகையில், வடிவமைக்கப்படுகிறது.

அதைப்போல 15 மண்டலங்களில் உள்ள 770 பூங்காக்களில், 3,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில், நிலத்தடி மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. இதில் 250 பூங்காக்களில் இப்பணிகள் முடிந்துள்ளது.பூங்கா, விளையாட்டு மைதானத்தில், பல இடங்களில் அமைக்கப்படும், ‘கேட்ச் பிட்’ எனும் மழைநீர் உள்வாங்கியில் வடியும் தண்ணீர், குழாய் வாயிலாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு எடுத்து செல்லப்படும்.

இதன் வாயிலாக, விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும். மேலும், நீர்நிலைகளில் நீர் உள்வாங்காமல், மழைநீர் வடிகால்களில் கொள்ளளவை மீறி செல்லும்போது, இதுபோன்ற விளையாட்டு திடல்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு திருப்பி விடப்படும். இதன்மூலம் குடியிருப்புகளில் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். இந்த கட்டமைப்பு, 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீரை சேகரித்து வைக்கும். இவற்றால் நீலத்தடி நீர் உயர்வதுடன், அருகாமை குடியிருப்புகளில் கோடை காலங்களிலும் நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.