சென்னை:  உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரப் பயணத்தை ஜூலை 1 முதல் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார். உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். கழக நிர்வாகிகள் ‘ஒன் டூ ஒன்’-ஆக என்னைச் சந்தித்து, தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் தெரிவிக்கலாம் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை உங்களில் ஒருவனான நான் மேற்கொண்டு வருகிறேன்.

இரண்டு நாட்களாக வேலூர் – திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தில் ஒன்றான ரெயில் மூலம் ஜூன் 25 அன்று காலையில் பயணத்தை மேற்கொண்டேன். சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வரும் வரையில் மக்களின் பேரன்பை ஏற்றுக்கொண்டு, காட்பாடி வரை ரெயிலில் அலுவல் பணிகளையும் ஆலோசனைகளையும் நடத்தியபடியே வந்தேன். எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தில் ஒன்றான ரெயில் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதைக் கைவிடக்கோரி பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுத்தேன்.

கழகத்தின் பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதியின் தொடர் வெற்றி நாயகரும் அமைச்சருமான துரைமுருகனுடைய சொந்த ஊருக்கு ரெயிலில் பயணித்ததும், அவருடைய நீண்ட நெடிய அரசியல் அனுபவங்களைப் பகிரக் கேட்டதும் பயணத்தை மேலும் இனிமையாக்கியது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் தலைமையில் கழகப் பணியாற்றி, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் தன் பணியை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவது கொள்கையுணர்வின் வெளிப்பாடாகும். காட்பாடி சந்திப்புக்குச் சென்றடைந்து அங்கிருந்து வேலூர் வரையிலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்துதான் சென்றேன். வேலூரில் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனையைத் திறந்து வைத்ததுடன், மாவட்டக் கழகச் செயலாளர் நந்தகுமார் அவர்களின் அணைக்கட்டு தொகுதியில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையையும், கழக அலுவலகத்தையும் திறந்து வைக்கும் வாய்ப்பும் அமைந்தது. கழகத்தினரும் பொதுமக்களும் வழியெங்கும் திரண்டிருந்து அன்பைப் பொழிந்தனர்.

எப்போது தொலைபேசியில் அழைத்தாலும், ஹலோ என்பதற்குப் பதிலாக ‘வாழ்க கலைஞர்’ என்றே கூறும் அன்புத் தொண்டர் – கழகத் தணிக்கைக் குழு உறுப்பினர் – மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முகமது சகி. அவர் அண்மையில் தொலைபேசியில் அழைத்து, தனது தம்பியும் வேலூர் மாநகர முன்னாள் துணை மேயருமான வழக்கறிஞர் முகமது சாதிக் அவர்கள் மறைந்துவிட்டார் என்று சொன்னபோது துடித்துப் போனேன். தலைவர் கலைஞரின் மீது பெரும் பற்றுகொண்ட குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு என்பது தனிப்பட்ட முறையிலும் என்னைப் பாதித்தது. எனவே, வேலூரில் முகமது சகி அவர்களது இல்லத்துக்குச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினேன்.

**EDS: SCREENSHOT VIA PTI VIDEO** Chennai: Tamil Nadu Chief Minister and Dravida Munnetra Kazhagam (DMK) chief MK Stalin addresses the media after attending the opposition parties’ meeting in Patna, in Chennai, Friday, June 23, 2023. (PTI Photo)(PTI06_23_2023_000257B)

மறுநாள் (ஜூன் 26) அன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்குச் சென்றபோதும் மக்களின் பேரன்பில் திளைத்தேன். மாவட்டப் பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு, நான் அடிக்கடி சொல்வது போல எதிலும் வல்லவர் என்பதைத் திருப்பத்தூரில் நடந்த அரசின் சார்பிலான மக்கள் நலத் திட்ட விழாவிலும், முத்தமிழறிஞர் கலைஞர் சிலைத் திறப்பு விழாவிலும் நிரூபித்துக் காட்டினார். திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் தேவராஜி அவர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. வழியெங்கும் மக்கள் திரண்டிருந்தனர். சாலையில் இறங்கி நடந்து, அவர்களுடன் கைகுலுக்கியும் செல்ஃபி எடுத்தும் இருதரப்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடனான சந்திப்புகள் நடைபெறுகின்றன. இது வெறும் ரோடு ‘ஷோ’ அல்ல. திராவிட மாடல் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகின்ற அன்புக் கூடல். திருப்பத்தூரில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் திரண்டிருந்த அரசு விழாவில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எந்தெந்த வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளித்து வருகின்றன என்பதையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் எடுத்துரைத்து, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன்.

எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அளவற்ற அன்பைப் பொழியும் மக்களிடம், நான்காண்டுகாலக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். அந்தந்த மாவட்டத்திற்கு நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களால் விளைந்துள்ள பயன்களைக் கேட்டறிகிறேன். திராவிட மாடல் அரசில் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகளையும் அதன் மூலமாக ஆண் – பெண் இரு தரப்பினருக்கும் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகளையும் கேட்கத் தவறுவதில்லை.

ஆட்சியின் பயன்களை அன்பும் நன்றியும் கலந்த குரலில் சொல்கின்ற பொதுமக்கள்… குறிப்பாக பெண்கள், இளம் வயதினர் ஆகியோர் தங்களின் தேவைகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு சில திட்டங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் அதையும் தெரிவிக்கின்றனர். அவர்கள் தெரிவிப்பதைக் கவனமுடன் கேட்டு, அதனை நிறைவேற்றுவதைத்தான் முதல் கடமையாகக் கொண்டிருக்கிறேன். உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். அந்த விமர்சனங்களில் உண்மை இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம். பொதுமக்களுக்கான அரசாகத் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வரும் நிலையில், இப்படியொரு அரசு அமைந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பத்தாண்டுகளாகப் பாடுபட்ட கழகத் தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ஒருபோதும் மறந்ததில்லை. மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல, கழகத்தினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் 1 அன்று மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் இந்தச் சந்திப்பு குறித்து நான் உரையாற்றும்போது அறிவித்து, அதன்படியே நடைபெற்று வருகிறது. கழக நிர்வாகிகள் ‘ஒன் டூ ஒன்’-ஆக என்னைச் சந்தித்து, தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் தெரிவிக்கலாம் என்ற உறுதியினை வழங்கியிருந்தேன். ஆட்சிப் பொறுப்பையும் சுமந்திருக்கும் ஒரு கட்சியின் தலைவர், தன் இயக்கத்தின் நிர்வாகிகளை நேரில் அழைத்து மனம் விட்டுப் பேசுவதைக் கூட பொறுக்க முடியாத அரசியல் எதிரிகளும், இன எதிரிகளும் இந்தச் சந்திப்பு குறித்த உண்மைக்குப் புறம்பான அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக அள்ளித் தெளிக்கும் வேலையைச் செய்தார்கள். பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் ஒன்று தன்னுடைய இதழில், ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பு குறித்து, தன் பேனாவில் மைக்குப் பதிலாகப் பொய்யை ஊற்றி எழுதியிருப்பதைப் படித்தபோது, தன் இதழியல் அறத்தைத் தொலைத்து அந்த நிறுவனம் ஏன் இந்தளவு காழ்ப்புணர்வு காட்டுகிறது என்றுதான் தோன்றியது.

அறிவாலயத்தில் நடக்கும் சந்திப்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்பதைக்கூட பெருங்குற்றம் போல அந்த ஏடு சித்தரித்திருந்தது. கழகத்தின் கட்டமைப்பைக்கூட பாரம்பரியப் பத்திரிகை அறியவில்லையே என்று நகைத்தபடி பக்கத்தைப் புரட்டினேன். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் காலத்தில் கழகம் எப்படியெல்லாம் சிறப்பாக இருந்தது என்று இப்போது எழுதும் இத்தகைய ஏடுகள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரது பேராற்றலைப் பாராட்டி எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கின்றன? தலைவர் கலைஞர் காலத்திலும் கழகத்தின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசியதை அவற்றின் பழைய ஏடுகளின் பக்கங்களைப் புரட்டினால் புரிந்துகொள்ளலாம். பேரறிஞர் அண்ணா காலத்துக் கழகம் போல, கலைஞர் காலத்தில் இல்லை என்றார்கள். கலைஞர் காலத்துக் கழகம் போல இப்போது இல்லை என்கிறார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா காலம் தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், தற்போது உங்களில் ஒருவனான என் தலைமையிலும் வலிமை குறையாமல் இருப்பதால்தான் 75 காலமாக உயிர்ப்புடன் வாழ்கிறது. ஆறாவது முறையாகத் தமிழ்நாட்டை ஆள்கிறது. ஏழாவது முறையும் ஆட்சி அமையும்.

‘உடன்பிறப்பே வா’ எனும் கழக நிர்வாகிகளின் மனம் திறந்த சந்திப்பின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அதில் பங்கேற்ற ஒவ்வொரு தொகுதியின் நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் நிர்வாகிகள் அறிவார்கள். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியைச் சேர்ந்த உடன்பிறப்பு கிள்ளை ரவீந்திரன் அந்த அனுபவத்தை உணர்வுப்பூர்வமாகச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்ததைப் படித்தேன். “உடன்பிறப்பே வா என்று அழைத்தார். சென்றேன். தாய், தந்தை இல்லாத எனக்குப் பெற்றோராய்த் தெரிந்தார். வாங்க கிள்ளை.. உட்காருங்க என்றார். 1986-இல் என் தொண்டை நரம்பு புடைக்கத் தளபதி வாழ்க.. தளபதி வாழ்க என்று கோஷம் போட்டேனே, அதே உணர்வுதான் வந்தது.

தலைவரைப் பார்த்ததும் அதுபோல கத்தலாமே என்ற எண்ணம் வாய்வரை வந்துவிட்டது. என்னைப் பற்றியும், ஊர் பற்றியும், ஊரார் பற்றியும் அறிந்து தெரிந்து வைத்திருந்த ஆதாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பேசினார். தலைவரின் இன்றைய அழைப்பு என்னை உற்சாகப்படுத்தியது. தலைவர் என் பெயரைக் கைப்பட எழுதி, வாழ்த்துகள் சொன்னார். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களில் இப்படி அடிமட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்துக் கேட்டும், சொல்லியும், திருத்தியும், பாராட்டவும் செய்தவர்கள் யார்? கலைஞர் எனும் வீரிய வித்தில் பிறந்தது எதுவும் சொத்தை இல்லை. வித்தைத் தாங்கும் வேர்களும் பழுது இல்லை” என்று உடன்பிறப்புக்கேயுரிய உணர்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார் கிள்ளை ரவீந்திரன்.

உடன்பிறப்பே வா நிகழ்வில் பங்கேற்ற நிர்வாகிகள் யாரிடம் கேட்டாலும் இதனைத் தெரிந்துகொள்ளலாம். இதுதான் கழகத் தலைமைக்கும் உடன்பிறப்புகளுக்கு மான உறவு. பேரறிஞர் அண்ணா காலம் முதல் உங்களில் ஒருவனான என் தலைமை வரை இந்த உறவுதான் இந்த இயக்கத்தின் பலம். நமக்கிடையிலான உணர்வுமிக்க உறவையும் பாசத்தையும் சீரழிக்கலாமா என எதிரிகளும் ஏடுகளும் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்பதைத்தான் 75 ஆண்டுகால இயக்கத்தின் வளர்ச்சி காட்டுகிறது.

‘மக்களிடம் செல்’ என்று பேரறிஞர் பெருந்தகை அறிவுறுத்திய வகையில், அரைநூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் மொழி -இன – சமுதாய முன்னேற்றத்திற்கான இயக்கமாகக் கழகத்தை வளர்த்தெடுத்தார். பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் வகுத்த பாதையில் நம் பயணம் தொடர்கிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் கழகத் தொண்டர்கள் முடங்கிக் கிடக்காமல், ‘ஒன்றிணைவோம் வா’ என்று களப்பணியாற்றிய நெஞ்சுரம் மிக்கவர்களாக இருந்தார்கள்.

அதனால்தான் கழகத்தின் மீதான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன். தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் – தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா ஜூன் 25 அன்று அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கழகத்தின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள். மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

கழகத்தின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பார்கள். இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று ஜூன் 28 மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெறுகிறது.

ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன்.

தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் – அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.