சென்னை: பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை. இதை கடைபிடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக அடிப்படையில் எழும் வன்முறைகளை தவிர்த்து, நல்லிணக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்கிட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி,
வருகைப்பதிவேட்டில் சாதி பெயர் இருக்கக்கூடாது; சாதி குறியீடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது; ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்க கூடாது என தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்களை மந்தனமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த நெடுவரிசையோ அல்லது விவரங்களோ இருக்கக்கூடாது.
எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கவோ, மாணவரின் சாதி அல்லது சாதிக்குக் காரணமான தன்மை பற்றி எந்த இழிவான கருத்துக்களையும் தெரிவிக்கவோ கூடாது.
மாணவர்கள் வண்ண மணிக்கட்டுபட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகளை வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதைத் தடைசெய்வதோடு அவற்றை அணிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அவ்வப்போது வழங்கிட வேண்டும்.
மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடும் அல்லது சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துவதோடு கூடுதலாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சாதி ரீதியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்றும் அணுகக் கூடிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடல் வேண்டும்.
பள்ளி வளாகங்களில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவதை தடை செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நன்நெறி வகுப்புகள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு மாணவரும் போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டால், அந்த மாணவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு பரிந்துரைத்து மற்றும் சார்ந்த வகுப்பாசிரியர் மாணவரின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில், மேலும் அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Child Helpline 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.
மாணவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள் மற்றும் பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ அல்லது பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
CCTV கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பாக பள்ளி மாணவ/மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து வகுப்புகளிலும் விளையாட்டு பாட வேளைகளில் கட்டாயம் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி ஈடுபடுவதை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். குழு விளையாட்டுக்கள் மூலம் மாணவர்களிடையே வேறுபாடுகளை களையலாம்,
எனவே பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குழு விளையாட்டுப் போட்டிகளை பள்ளிகளுக்கு ஏற்றவாறு தெரிவு செய்து விளையாடிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.