அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் ஆகியோருக்கு வெனிஸ் நகரில் நடைபெற உள்ள திருமணம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய திருமணம் விழா என்று அழைக்கப்படுகிறது.
இந்த திருமண நிகழ்ச்சியின் பெரும்பகுதி யாருக்கும் தெரியாத வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இருந்தபோதும், இந்த திருமண நிகழ்ச்சிக்காக ₹430 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில், ஹாலிவுட் நடிகர்கள், பிரபல பாடகர்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகள், அரச குடும்பத்தினர் என உலகின் பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமண விழாவிற்கான சரியான தேதி மற்றும் இடம் ரகசியமாகவே இருந்தாலும், முக்கிய கொண்டாட்டம் சனிக்கிழமை வெனிஸ் குடியரசின் கடற்படை மையமாக இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஆர்சனலில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் உயரமான சுவர்கள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான கப்பல் கட்டும் தளங்களுக்கு பெயர் பெற்ற இந்த இடம், தனியார் நிகழ்வுக்காக சீல் வைக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெனிஸ் விமான நிலையத்தில் தனியார் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெனிஸ், ட்ரெவிசோ மற்றும் வெரோனாவில் உள்ள விமான நிலையங்களில் சுமார் 90 தனியார் ஜெட் விமானங்கள் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாயன்று டஸ்கனியில் இருந்து விமானத்தில் வந்த இவான்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்த முதல் முக்கிய விருந்தினராக அறியப்படுகிறார்.
வெனிஸின் கால்வாய்கள் வழியாக விருந்தினர்களை அழைத்துச் செல்ல, ஏற்பாட்டாளர்கள் உள்ளூர் ஆபரேட்டர்களிடமிருந்து குறைந்தது 30 நீர் டாக்சிகளை முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கியுடெக்கா தீவில் உள்ள ஹோட்டல் சிப்ரியானி மற்றும் கிராண்ட் கால்வாயில் உள்ள அமன் வெனிஸ் உள்ளிட்ட நகரத்தின் மிகவும் உயரடுக்கு ஹோட்டல்கள் 200-250 விருந்தினர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெனிஸை உள்ளடக்கிய வெனெட்டோ பிராந்தியத்தின் தலைவர் லூகா ஜாயாவின் கூற்றுப்படி, திருமணத்தின் மொத்த செலவு €40-48 மில்லியன் (தோராயமாக ₹430 கோடி) வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.