சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கலந்தாய்வில் போக்சோ வழக்கில் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதே மாவட்டத்தில் பணி வழங்கக் கூடாது என தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது  என உறுதிப்படுத்தப்படாத  தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பொது மாறுதல் கவுன்சலிங் ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது என  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித்துறையில் பணியிட மாறுதலுக்காக சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கவுன்சிலிங்) ஜூலை 2 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18ஆம் தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் நரேஷ் அறிவித்துள்ளார். ஆனால், போக்சோ வழக்கில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, மீண்டும் அதே மாவட்டத்தில் பணி வழங்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேரடி நியமனம், பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை மற்றும் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List), வரும் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வரும் 30ஆம் தேதி வெளியிடப்படும்.

இதுதொடர்பாக ஏற்கனவே பணி மாறுதலுக்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்பட்ட நிலையில்,   பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஜூன்  26 மற்றும் 27ம் தேதிகளில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல், முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதாவது இருந்தால் 28ம் தேதி தெரிவிக்க வேண்டும். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்.

பொதுவான அறிவுரைகள்: உள்மாவட்டத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்களுக்குரிய சுழற்சி (Turn) வரும்போது, அம்மாவட்டத்தில் தங்களுக்கு மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில், Not Willing என தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர், உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு, Not Willing என தேர்வு செய்தவர்களுக்கு மீண்டும் உள்மாவட்டத்திற்குள் மாறுதல் பெற வாய்ப்பு அளிக்கப்படும்.

  • மலை சுழற்சி (மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான) மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்) 2.7.2025 புதன்கிழமை நடைபெறும்.
  • இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) பணிநிரவல் 3.7.2025 முற்பகல் வியாழக்கிழமை நடைபெறும்.
  • இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) 3.7.2025 பிற்பகல் வியாழக் கிழமை நடைபெறும்.
  • இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 4.7.2025 வெள்ளிக் கிழமை நடைபெறும்.
  • இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 5.7.2025 சனிக் கிழமை காலை நடைபெறும்.
  • இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 5.7.2025 மதியம் சனிக் கிழமை நடைபெறும்.
  • இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் 7.7.2025 முதல் 11.7.2025 வரை நடைபெறும்.
  • இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான நேரடி நியமன கலந்தாய்வு 14.7.2025 18.7.2025 வரை நடைபெறும்.
  • தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 19.7.2025 சனிக்கிழமை நடைபெறும்.
  • தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 19.7.2025 சனிக்கிழமை நடைபெறும்.
  • தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 21.7.2025 திங்கட்கிழமை நடைபெறும்.
  • பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 24.07.2025 வியாழக் கிழமை நடைபெறும்.
  • பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 25.07.2025 வெள்ளிக் கிழமை நடைபெறும்.
  • பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 26.7.2025 மற்றும் 28.7.2025, 29.7.2025, 30.7.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜுன் 19ந்தேதி பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,  தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், கலந்தாய்வு தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தொடக்கக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு பணிகள் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஜூன் 19 ந் தேதி முதல் 25 ந் தேதி மாலை 6 வரை EMIS-ல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம். 25-க்கு பிறகு எவ்விதமான மாறுதல் கோரும் விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது எனத் திட்டவட்டமாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும் போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது ஏதேனும் ஆசிரியர் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள Login IDயில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தங்களுடைய Individual Login ID யில் சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்ய வேண்டும்.

ஆசிரியரின் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பெற்ற தொடர்புடைய கல்வி அலுவலர்கள் சரிபார்த்து பதிவேற்றம் செய்வதுடன், ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகையில் விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகு மாறுதல், பணி நிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பொது மாறுதல் சார்பாக மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள் விண்ணப்பத்தை சரிபாா்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும் போது அதற்குரிய சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலரால், கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம், பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா? என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கிமீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்பட வேண்டும்.

மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) கோரியுள்ள விண்ணப்பங்கள் மீது பொது மாறுதல் கலந்தாய்வுகள் முடிந்த பின்னர் இது தொடர்பாக அறிவுரைகள் தனியாக வழங்கப்படும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி , நகராட்சி, மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுகள் பதவி வாரியாக கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்” எனவும் அதில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.